கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 20 June 2022

Saturday 30 October 2021

VVC:-Aalan-நவராத்திரி விழா

Thursday 2 January 2014

மகாவிஷ்ணு

மகாவிஷ்ணுவின் அருள் பார்வையால் தேவர்கள் சுகமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஒருநாள், துர்வாச முனிவர் வைகுந்தம் சென்று மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் தரிசனம் செய்யும்போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து, துர்வாச முனிவருக்கு ஓர் அழகான தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். அந்தத் தெய்வீக மாலையைக் கையில் ஏந்தியபடி முனிவர் வந்து கொண்டிருந்தார். 

அப்போது, தேவேந்திரன் ( தேவேந்திரன் = தேவர்களின் அரசன் ) தனது ஐராவதம் என்ற யானையின் மீது ஏறி உலா வந்துகொண்டிருந்தான். துர்வாசர் அம்மாலையைத் தேவேந்திரனுக்குக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக வாங்கி யானையின் தலை மீது வைக்க, அது நழுவிக் கீழே விழுந்தது. அந்தத் தெய்வீக மலர் மாலையை யானை தன் காலால் மிதித்து நசுக்கி அவமரியாதை செய்தது. அதனைக் கண்ட முனிவர் கடும் கோபத்துடன், “ தேவேந்திரா, மகாவிஷ்ணுவின் அருளினால்தான் நீ இந்தப் பதவியும், சிறப்பும் பெற்றிருக்கிறாய். 

அதை மறந்து, மகாலட்சுமி கொடுத்த மலர் மாலையை இழிவுபடுத்தி விட்டாய். அதனால், நீ லட்சுமி கடாட்சத்தையும், தேவ பதவியையும் இழப்பாய்” என்று சாபம் கொடுத்தார். துர்வாச முனிவர் இட்ட சாபத்தினால் தேவலோகம் முழுவதும் இருண்டது. தேவலோகத்திலிருந்த அனைவருக்கும், தேவேந்திரனால் சாபம் உண்டானது. தேவர்கள் அனைவரும் தமது பலம் முழுவதையும் இழந்தார்கள். அப்போது, அசுரர்களின் பலம் ஓங்கி, அவர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேவலோகத்தில் இருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். 

அதனால், தேவேந்திரன் உள்பட அனைத்து தேவர்களும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர். பிரம்மனாலும் அவர்களின் துயரைத் தீர்க்க முடியவில்லை. அனைவரும், விமோசனம் வேண்டிப், பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் போய் சரண் அடைந்தார்கள். மகாவிஷ்ணு, “ தேவேந்திரா, அசுரர்களுடன் போரிட்டு அழிக்கும் சக்தி உங்களிடம் இல்லை. அதனால், நீங்கள் அசுரர்களுடன் சமாதானமாகி, திருப்பாற்கடலைக் கடைந்து, தேவ அமிர்தம் எடுத்து உண்டால் பலம் உண்டாகும். 

சாகா வரம் கிடைக்கும். பிறகு நீங்கள் இழந்ததைப் பெறலாம்“ என்று கூறினார். இதையடுத்து அசுரர்களுடன் சமாதானம் பேச இந்திரனையே அனுப்பினார் பிரம்ம தேவர். இந்திரனும் அசுரர்களுடன் சமாதானம் செய்து, அமிர்தம் கடைவதற்கான முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர். பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக மந்தார மலையைத் தூக்கிக்கொண்டு செல்லும்போது, பாரம் தாங்காமல் கீழே போட்டுவிட, பலர் மாண்டு போனார்கள். 
அப்போது மகாவிஷ்ணுவே அங்கு தோன்றி, அந்த மலையைத் தன் ஒரு கையால் ஏந்திப் பாற்கடலின் நடுவே வைத்தார். வாசுகி என்ற பாம்பு மலையைச் சுற்றிக்கொண்டது. தேவர்கள் பாம்பின் தலையைப் பிடிக்க, அசுரர்கள், “ நாங்கள் கேவலமானவர்கள் இல்லை. பாம்பின் வாலை நாங்கள் பிடிக்க மாட்டோம்’ என்று வீரம் பேசினார்கள். அவர்கள் விருப்பப்படி, தேவர்கள் பாம்பின் வாலையும், அசுரர்கள் தலையையும் பிடித்துப் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தார மலை பாற்கடலில் அமிழ்ந்து மூழ்கியது. 

அச்சமயத்தில் மகாவிஷ்ணு ஒரு பெரிய ஆமை போன்ற கூர்ம அவதாரம் ( கூர்மம் = ஆமை ) எடுத்துக் கடலுக்குள் புகுந்து தன முதுகால் மலையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டார். மீண்டும் பாற்கடலைக் கடைந்தபோது, பாம்பின் வாயிலிருந்து விஷக்காற்று வெளிப்பட்டது. அதனால், தலைப் பக்கத்திலிருந்த அசுரர்கள் தாக்கப்பட்டுத் தங்கள் பலத்தை இழந்தார்கள். அப்போது மிகவும் கொடுமையான ஆலகால விஷம் பாற்கடலிலிருந்து வெளியே வந்தது. அதன் வேகத்தைப் பார்த்துப் பயந்த தேவர்களும், அசுரர்களும் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். 

உடனே, தேவேந்திரன் சில தேவர்களுடன் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்கள். சிவபெருமான் ஆலகால விஷத்தைத் தமது கையில் எடுத்துப் பருகினார். அதைக்கண்ட பார்வதிதேவி, ஆலகால விஷம் கீழே இறங்காதபடி சிவனின் கழுத்தைப் பிடிக்க, விஷம் கழுத்தளவிலேயே நின்று விட்டது. கழுத்து நீல நிறமானது. இதனால்தான் சிவபெருமானுக்குத் ‘ திருநீலகண்டன்’ என்ற பெயர் உண்டானது. மீண்டும் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, காமதேனு என்ற தேவ பசு தோன்றியது. 

முனிவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு, வெண்மையான குதிரை தோன்றியது. அசுரர்கள் அதைப் பிடித்துக் கொண்டார்கள். அதன்பின், கற்பக மரம் தோன்றித் தேவலோகத்தை அடைந்தது. பிறகு, அப்சரஸ் என்ற நடனப் பெண்கள் தோன்றினார்கள். அவர்கள் தேவலோகத்தில் நடனமாடச் சென்றார்கள். பிறகு, மகாலட்சுமி தோன்றி மகாவிஷ்ணுவுக்கு மாலை இட்டாள். பாற்கடலில் இருந்து தோன்றிய வாருணி தேவியை அசுரர்கள் கைப்பற்றினர். 

இறுதியாக, மகாவிஷ்ணுவின் அம்சமான தன்வந்திரி ஒரு தங்கக் கலசத்தில் தேவ அமிர்தத்தை ஏந்தியவாறு தோன்றினார். அசுரர்கள் வேகமாகச் சென்று, தேவர்களை முந்திக்கொண்டு அக்கலசத்தைப் பறித்துக் கொண்டு ஓடினார்கள். அவர்களிடம் இருந்து அமிர்தத்தை கைப்பற்ற முடிவு செய்த மகாவிஷ்ணு மோகினி என்ற அழகான பெண் உருவம் எடுத்து, அசுரர்களை மயக்கினார். இதன்மூலம் அமிர்தத்தை பறித்தார். பிறகு அமிர்தத்தைத் தேவர்களுக்கே பங்கிட்டுக் கொடுத்து, அசுரர்களை ஏமாற்றினார். 

அப்போது, ராகு என்னும் அசுரன் தந்திரமாகத் தேவர்களின் வரிசையில் சூரியன், சந்திரனுக்கு நடுவில் வந்து அமர்ந்து, அமிர்தத்தைப் பருகி விட்டான். அவன் அசுரன் என்பதை அறிந்து மகாவிஷ்ணு தன சக்கராயுதத்தால் ராகுவின் தலையை வெட்டினார். தேவ அமிர்தத்தை அருந்தி இருந்ததால், ராகு மரணம் அடையவில்லை. அப்போது, பிரம்மா ராகுவின் தலையுடன் ஒரு பாம்பின் உடலையும், அவன் உடலோடு பாம்பின் தலையையும் இணைத்துவிட, ராகு, கேது என்று இரு கிரகங்கள் உண்டாயின. 

அமிர்த பானத்தை அருந்திய தேவர்கள் புதிய பலமும் சாகாவரமும் பெற்றனர். அசுரர்களை வென்று அவர்களைப் பாதாள லோகத்துக்கு ஓடும்படி விரட்டிவிட்டு, மீண்டும் தேவ லோகத்தைக் கைப்பற்றினார்கள். 

Wednesday 1 January 2014

அம்மன்











Tuesday 31 December 2013

சைவசமயம் - கடவுள்

 







அருணகிரிநாதர்

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று

கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!