கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்
Showing posts with label 1ம்திருமுறை. Show all posts
Showing posts with label 1ம்திருமுறை. Show all posts

Saturday, 3 December 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருப்பூந்தராய்

பாடல் எண் : 1

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.


பொழிப்புரை :
செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கிவந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறையை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ? சொல்வீராக.

குறிப்புரை :
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம் முதலாக நான்கு பதிகத்தில், சிவபெருமானை முன்னிலையிற் பெற்று, வினாவுதலும் விடை கூறியருள வேண்டுதலும் அமையப்பாடியிருத்தல்பற்றி, இவற்றை `வினாவுரை` என்றனர். இத்தலைப்புடைய பிற மூன்றும் காண்க. இதன் ஒவ்வொரு திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக் குறித்து வினாவினார். முதல் வினா இறைவன் திருமுடிச்சார்புடையது. ஈற்று வினா, திருவடிச்சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம். காமதகனம், கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், இராவணனுக்கு அருளிய ஆக்கம் என்பவை வினாவிற்குரிய பொருளாயுள்ளன. மூன்றாம் அடிகளிலுள்ள விளிகளால் திருவடிப் பெருமையும், அமலமும் (யானையுரித்தவரலாறும்), விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய வரலாறும்), உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் (மானேந்தியதால் விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத் திருமேனிப் பொலிவும், மால்விடையூரும் மாட்சியும், மறை முதலாகும் இறைமையும், அடியாரைக்காக்கும் அடியும் (காரணமும்) குறிக்கப்பட்டன. இவ்வாறு பதிகந்தோறும் உய்த்துணர்ந்து போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின் எய்தும். திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன் அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது. பாக்கள் வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக் கவர்ந்தது, மருளுலகம் இவ்வுண்மையை உணராது. வேதத்தின் இயல்பே இதன் இயல்பு. முதற் பத்துத் திருப்பாடல்களுள்ளும் `சொலீர்` என்று விடையிறுத்தருள வேண்டுவதுணர்க. சடையில் பிறையும் பாம்பும் ஒருசேர வைத்ததற்குக் காரணம் சொல்ல வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கொள்ளும் ஐதிகத்தைக் கருத்திற் கொண்டு, பகைப்பொருள்கள் இரண்டும் ஓரிடத்தில் இருப்பது குற்றம் என்பார்க்கு, `வேண்டுதல் வேண்டாமை இல்லான்` ஆகிய சிவபிரான் சடையில், பகை நீங்கி உறவுகொள்ளும் நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார். பிறையைச் சூடிய வரலாறு, சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள் கிடைப்பது உறுதி என்னும் உண்மையை உணர்த்துவது. ஐந்தலைப் பாம்பணிந்தது,`பிறவி ஐவாய் அரவம் பொரும் பெருமான்` (திருவாசகம் 139) என்ற கருத்தினது. "தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறியா மதியான் என அமைத்தவாறே"(பட்டினத்தார்  ஒருபா ஒருபஃது 6.) `சோழவளநாடு சோறுடைத்து` இதிலுள்ள செந்நெல் அம் கழனிப்பழனம் உடைமை, சீகாழிக்கும் உரித்தாயிற்று. கிழி - துணி. கிழி (துணியும் அறுவையும்) காரணப்பெயர், புரை - ஒத்த. துன்னி-நெருங்கி. துன்னித்தோய்கழல் என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள் விழுந்துகிடக்கும் தோற்றம் வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும் காட்சியை ஒத்திருந்தது என்க. `புன்னை பொன்தாது உதிர்மல்கும் அந்தண்புகலி` (தி.3.ப.7.பா.9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம் போல்வன ஆதல் அறியப்படும். பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது. பாண் - பாட்டு. பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு. இதில், பிறையும் பாம்பும் சடையில் ஒருங்கு வைத்தவாற்றை வினாவினார்.


பாடல் எண் : 2


எற்று தெண்டிரை யேறிய சங்கினொ டிப்பிகள்
பொற்றி கழ்கம லப்பழ னம்புகு பூந்தராய்ச்
சுற்றி நல்லிமை யோர்தொழு பொற்கழ லீர்சொலீர்
பெற்றம் ஏறுதல் பெற்றிமை யோபெரு மானிரே.

பொழிப்புரை :
எறிகின்ற தெளிந்த கடல் அலைகளில் ஏறிவந்த சங்குகளும் இப்பிகளும் பொன்போல் விளங்கும் தாமரைகள் மலர்ந்த வயல்களில் வந்து புகும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் சூழ்ந்து தொழும் அழகிய திருவடிகளை உடைய இறைவரே! அயிராவணம் முதலிய ஊர்திகள் இருக்க விடையேறி வருதல் உமக்கு ஏற்ற தன்மைத் தாகுமோ? சொல்வீராக.

குறிப்புரை :

எற்று - எறிந்த. திரை - அலை. இப்பி - சங்கினத்துள் முதலாவது. இடம்புரியும் வலம்புரியும் சலஞ்சலமும் பாஞ்சசன்னியமும் ஆகிய சங்கினம் நான்கும் முறையே இப்பி முதல் சலஞ்சல முடியக்கூறும் நான்காலும் ஆயிரம் ஆயிரமாகச் சூழப்பெற்ற பெருமையின. (நிகண்டு, தொகுதி 3.பா.73) பெற்றம் - எருது. பெற்றிமை - தன்மை, பேறு, உயர்வுடையது. சிறந்த பாக்கியம் என்னுங்கருத்தில் வந்தது. பெருமகன் என்பது பெருமான் என்று மருவிற்று. மகன் - தேவன், (மகள்-தேவி, திருமகள், நாமகள்) பெருமானிர் - விளி, ஏகாரம் ஈற்றசை, சீகாழிக் கழனியிற் சங்கும் இப்பியும் பொன்போல் விளங்கும் தாமரைகளும் மிக்குள்ளன; பெற்றமேறுதல் - `பசு வேறும் பரமன்` விடையேறுதல்; பசுபதி என்பதைக் குறித்தது. இதில் விடை (பசு) ஏறும் உண்மையை வினாவினார்.


பாடல் எண் : 3


சங்கு செம்பவ ளத்திரண் முத்தவை தாங்கொடு
பொங்கு தெண்டிரை வந்தலைக் கும்புனற் பூந்தராய்த்
துங்க மால்களிற் றின்னுரி போர்த்துகந் தீர்சொலீர்
மங்கை பங்கமும் அங்கத்தொ டொன்றிய மாண்பதே.


பொழிப்புரை :

பொங்கி வரும் தெளிந்த கடல் அலைகள் சங்கு செம்பவளம் முத்து ஆகியவற்றைக் கொண்டு வந்து வீசும் நீர்வளம் சான்ற பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் உயரிய பெரிய களிற்றுயானையை உரித்து அதன் தோலைப் போர்த்து மகிழ்ந்துறையும் இறைவரே! உமது திருமேனியின் இடப்பாகமாக உமையம்மையை ஓருடம்பில் ஒன்றுவித்துள்ள மாண்பு யாதோ? சொல்வீராக.


குறிப்புரை :
பொங்குதல் - உயர்தல், மிகுதல், புனல் - நீர், துங்கம் - உயர்ச்சி. பவளத்தின் அடைமொழியால் மற்றையிரண்டின் நிறம் வெளிப்படை, திரள் - திரட்சி; தொகுதியுமாம். களிறு - மதக்களிப்புடையது (யானையின் ஆண்). மால் - பெருமை, மயக்கமுமாம். உரி - தோல், உகந்தீர் - உயர்ந்தவரே, பங்கம் - கூறு. (பங்கு+அம்). அங்கம் - உறுப்பு, இங்குத் திருமேனியைக் கொள்க. ஒன்றிய மாண்பு - அர்த்தநாரீச்சுரவடிவின் சிறப்பு, யானையை உரித்தது ஆணவமல நாசம் என்பர், மங்கை பங்கு; போகியா யிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிதல் பற்றியும் உயிர்க்கு இச்சாஞானக் கிரியா பலத்தை மிக விளைத்தல் பற்றியும் ஆயிற்று. ஆற்றலுக்கு அதுவே ஏது. களிற்றையுரித்த போது தேவியார் அஞ்சியதாகச் சொல்வது, ஞானமும் அஞ்சத் தக்க அத்துணைக் கொடியது இருண்மலம் என்பதுணர்த்த. இதில் மெய்ப்பாதியில் மாதிருக்கும் உண்மையை வினாவினார்.


பாடல் எண் : 4

சேம வன்மதில் பொன்னணி மாளிகை சேணுயர்
பூம ணங்கம ழும்பொழில் சூழ்தரு பூந்தராய்ச்
சோம னும்மர வுந்தொடர் செஞ்சடை யீர்சொலீர்
காமன் வெண்பொடி யாகக் கடைக்கண் சிவந்ததே.


பொழிப்புரை :
பாதுகாவலாக அமைந்த வலிய மதில்களும் பொன்னால் அழகுறுத்தப்பெற்ற அழகிய மாளிகைகளும், மிக உயர்ந்து மலர்மணம் கமழும் சோலைகளும் சூழ்ந்துள்ள பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், திங்களும் பாம்பும் தங்கிய செஞ்சடையுடையவராய் எழுந்தருளிய இறைவரே! உயிர்கட்குப் போகத்தின் மேல் அவாவினை விளைக்கும் மன்மதன் வெண்பொடியாகுமாறு அவனைக் கடைக்கண் சிவந்து அழித்தது ஏனோ? சொல்வீராக.


குறிப்புரை :
சேமம் - காவல், சேண் உயர்தல் - விண்ணில் மிக வோங்குதல், பொழில் சோலை, சோமன் - பிறை, அரவு - பாம்பு, காமன் - மன்மதன். வெண்பொடி  (எரிந்த) சாம்பல். சிவத்தல் - கோபக்குறிப்பு, "கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொரு ள" (தொல் சொல்,உரிச்சொல்.76) மன்மத தகனம், யோகியாய், யோகமுத்தி உதவுதற் பொருட்டு நிகழ்கின்ற இயற்கை. (சித்தியார்.70) இதில் காமனை எரித்த வாற்றை வினாவினார்.


பாடல் எண் : 5

பள்ள மீனிரை தேர்ந்துழ லும்பகு வாயன
புள்ளு நாடொறுஞ் சேர்பொழில் சூழ்தரு பூந்தராய்த்
துள்ளு மான்மறி யேந்திய செங்கையி னீர்சொலீர்
வெள்ள நீரொரு செஞ்சடை வைத்த வியப்பதே.

பொழிப்புரை :

நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து கொள்ளுதற்குத் திரியும் பிளந்த வாயை உடைய நாரைப் பறவைகள், நாள்தோறும், பல இடங்களிலிருந்தும் வந்து தங்கும் பொழில்கள் சூழ்ந்த பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், துள்ளுகின்ற மான் கன்றை ஏந்திய செங்கையை உடைய சிவபிரானே! பெருகி வந்த கங்கை வெள்ளத்தைச் சிவந்த சடையில் தடுத்து நிறுத்தித் தாங்கிய வியத்தகு செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


குறிப்புரை :

நீர்ப் பள்ளங்களில் இருக்கும் மீன்களை இரையாகத் தேர்ந்து அலையும் நாரை கள் நாள்தொறும் சோலையில் தங்கும் வளமுடையது சீகாழி. நாரை பகுந்த (பிளந்த)வாய் உடைமையால் பகுவாயன புள்ளு என்றார். `வெண் குருகும் பகுவாயன நாரையும் திரைவாய் இரைதேரும் வலஞ்சுழி` (தி.2.ப.2.பா.2) என்றது காண்க. உணவும் இரையும் ஒன்றல்ல என்பதை இழிவறிந்துண்பான் கண் இன்பம்போல் நிற்கும் கழிபேர் இரையான்கண் நோய் (குறள். 946) என்ற தனால் அறிக. செஞ்சடைமேல் நீர்ப்பெருக்கை வைத்த வியப்பைச் சொல்வீர் என்று துள்ளுகின்ற மான்கன்றை ஏந்தியசெங்கையையுடைய சிவபெருமானை  நோக்கி வேண்டுகின்றார். காட்டில் இருக்கத்தக்க மானைக் கையிலும் கையில் இருக்கத்தக்க (கமண்டல) நீரைச் சடைக் காட்டிலும் ஏந்தியது வியப்பு. இதில் கங்கையைத் தாங்கிய ஆற்றலை வினாவினார்.


பாடல் எண் : 6

மாதி லங்கிய மங்கைய ராட மருங்கெலாம்
போதி லங்கம லம்மது வார்புனற் பூந்தராய்ச்
சோதி யஞ்சுடர் மேனிவெண் ணீறணி வீர்சொலீர்
காதி லங்குழை சங்கவெண் டோடுடன் வைத்ததே.


பொழிப்புரை :

அழகிய பெண்கள் ஆங்காங்கே நடனம் ஆடுவதும், ஊர் மருங்கெலாம் பூத்துள்ள அழகிய தாமரை மலர்கள் தம்மிடம் நிறைந்துள்ள தேனை ஒழுக விடுவதும் ஆகிய நீர்வளம் மிக்க பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், ஒளி மிக்க அழகிய தமது திருமேனியில் வெண்ணீறு அணிந்து எழுந்தருளிய இறைவரே! காதுகள் இரண்டனுள் ஒன்றில் குழையையும் ஒரு காதில் சங்கத்தோட்டையும் அணிதற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

மாது - அழகு, இலங்குதல் - விளங்குதல், மருங்கு - பக்கம், போது - மலரும் பருவத்து அரும்பு, கமலம் - தாமரை, மது - கள், குழையும் தோடும் காதணிகள், சீகாழியில் அழகிய மங்கையர் ஆடுதற்குப் பரிசாகத் தாமரை, மலர்கள் தேனை ஒழுக்குகின்றன என்று நீர் நில வளம் உணர்த்தப்பட்டது. செம்மேனியில் வெண்ணீற்றை அணிவீர் என்று அழைத்து, திருக்காதில் குழையும் தோடும் உடன் வைத்த புதுமையை வினாவினார். `தோடுடையான் குழையுடையான்` (தி.1 ப.61 பா.8) `தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் ..... உடைத்தொன்மைக் கோலம்` என்பது திருவாசகம் (232).


பாடல் எண் : 7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.


பொழிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.


குறிப்புரை :

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

பாடல் எண் : 8

வருக்க மார்தரு வான்கடு வன்னொடு மந்திகள்
தருக்கொள் சோலை தருங்கனி மாந்திய பூந்தராய்த்
துரக்கு மால்விடை மேல்வரு வீர்அடி கேள்சொலீர்
அரக்கன் ஆற்றல் அழித்தருளாக்கிய ஆக்கமே.


பொழிப்புரை :

இனங்களோடு கூடிய ஆண் குரங்குகள், பெண் குரங்குகளோடு கூடி, மரங்கள் நிறைந்துள்ள சோலைகள் தரும் கனிகளை வயிறார உண்டு மகிழும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில் எழுந்தருளியிருந்து, செலுத்தத்தக்க மாலாகிய இடபத்தின் மேல் காட்சிதரும் அடிகளே! இராவணனின் தருக்கினை அழித்து உடன் அவனுக்கு அருள் வழங்கிய ஆக்கத்திற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.


குறிப்புரை :

வருக்கம் - இனம், கடுவன் - ஆண் குரங்கு, மந்தி - பெண் குரங்கு, தரு - மரம், மாந்திய - தின்ற, துரக்கும் - துரத்தும். (பிறவினை) துரந்த, துரந்து எனல் தன்வினையாட்சி. அருகிய வழக்கு. வருவீராகிய அடிகேள் என்று விளித்து, இராவணனது ஆற்றலை அழித்து அருள்கொடுத்த ஆக்கத்தைப் பற்றி இதில் வினாவினார்.

பாடல் எண் : 9

வரிகொள் செங்கயல் பாய்புனல் சூழ்ந்த மருங்கெலாம்
புரிசை நீடுயர் மாடநி லாவிய பூந்தராய்ச்
சுருதி பாடிய பாணியல் தூமொழி யீர்சொலீர்
கரிய மால்அயன் நேடிஉ மைக்கண்டி லாமையே.

பொழிப்புரை :

மருங்கெலாம் வரிகளைக் கொண்டுள்ள செவ்விய கயல்மீன்கள் பாயும் நீர் நிலை சூழ்ந்ததும், மதில்கள் சூழ்ந்து நீண்டு உயர்ந்த மாடமாளிகைகள் விளங்குவதுமான பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், வேதங்களைப் பாடியும், இசைப் பாடல் போன்ற இனிய மொழிகளைப் பேசியும் எழுந்தருளிவிளங்கும் இறைவரே! கரிய திருமாலும் பிரமனும் உம்மைத் தேடிக் காண இயலாமைக்குரிய காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

சீகாழியில் உள்ள மாடமாளிகைகளின் உயர்வும் நீள்வும், புரிசையும், நீர்வளமும், அந்நீரிற் பாயும் மீன்களின் செழுமையும் குறிக்கப்பட்டன. வேதாகமங்கள் சிவபெருமான் திருவாக்காதலின், சுருதி பாடிய பாண் இயல் தூமொழியீர் என்று விளித்தார். இதில், அரியும் அயனும் அடிமுடி தேடிக் காணாமையை வினாவினார். பாடிய பாண் (பாட்டு) இயலும் மொழி. தூமொழி. சுருதி - கேள்வி, எழுதாக்கிளவியாதலின் கேள்வியால் தொன்று தொட்டுணர நின்றன. நேடி - தேடி.

பாடல் எண் : 10

வண்ட லங்கழ னிம்மடை வாளைகள் பாய்புனற்
புண்ட ரீகம லர்ந்தும துத்தரு பூந்தராய்த்
தொண்டர் வந்தடி போற்றிசெய் தொல்கழ லீர்சொலீர்
குண்டர் சாக்கியர் கூறிய தாங்குறி யின்மையே.


பொழிப்புரை :

வளம்மிக்க வண்டல் மண்ணை உடைய வயல்களின் மடைகளில் வாளை மீன்கள் பாயும் நீர் நிலைகளில் தாமரைமலர்கள் மலர்ந்து தேனைத் தரும் பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், தொண்டர்கள் வந்து வணங்கும் கழல் அணிந்த பழமையான திருவடிகளை உடைய இறைவரே! சமணர்களும் சாக்கியர்களும் உம்மைக் கூறும் பொருளற்ற பழிமொழிகட்குக் காரணம் யாதோ? சொல்வீராக.

குறிப்புரை :

வண்டல் - வெள்ளத்தால் அடித்துக்கொண்டு வரப்பட்ட உரம்மிக்க மணல்.மடை - நீர்மடை. புண்டரிகம் - தாமரை. தொல் கழல் - திருவடியின் தொன்மை. ஆதியு ம் மத்தியும் அந்தமும் இல்லாதது. கழல் என்பது எருதினது கொம்புபோல் அமைந்தது. பகைவர் உடம்பில் ஊறுபடுத்த, வலக்காலில் தரிக்கப்படுவது."தாள் ,களங்கொளக் கழல்ப றைந்தன கொலல் லேற்றின் மருப்புப் போன்றன" (புறநா னூறு.4.3-4) என்னும் அடிகளால் அறிக. தேய்ந்த பின் மழமழவென்றாகி எருதின் கொம்பையொத்தது. வடிவில் முழுதும் ஒப்பது. குண்டர் - சமணர். குறியின்மை - பிழையாதகுறி இல்லாமை. (தி.2 ப.82 பா. 10) இதில் புறச் சமயத் தார் செய்யும் நிந்தையின் பொருளின்மையை வினாவினார்.


பாடல் எண் : 11

மகர வார்கடல் வந்தண வும்மணற் கானல்வாய்ப்
புகலி ஞானசம் பந்தன்எ ழில்மிகு பூந்தராய்ப்
பகவ னாரைப்ப ரவுசொன் மாலைபத் தும்வல்லார்
அகல்வர் தீவினை நல்வினை யோடுட னாவரே.


பொழிப்புரை :

சுறா மீன்களை உடைய பெரிய கடல் நீர் வந்து சேரும் மணல் நிறைந்த கடற்கரைச் சோலைகளைக் கொண்டுள்ள புகலிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், அழகு மிக்க பூந்தராயில் எழுந்தருளிய இறைவரைப் பரவிப் பாடிய இப்பதிகப் பாடல் பத்தையும் ஓதவல்லவர் தீவினை அகல்வர். அவர்கள் நல்வினை உடையவர் ஆவர்.


குறிப்புரை :

மகரம் - சுறாமீன், அணவும் - பொருந்தும். கானல் - கடற்கரைச் சோலை. புகலி - சீகாழி. எல்லாவுயிர்க்கும் புகலிடமானது. பகவனார் - திரு, ஞானம் முதலிய ஆறு குணங்களும் உடையவர். பரவுதல் - வாழ்த்தல். தீவினையை அகல்வர் - நல்வினையை அகலாது உடனாவார். ஓடு உடன் இரண்டும் இணைந்து வந்தவாறு அறியத்தக்கது.

Monday, 3 October 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருக்கொடுங்குன்றம்

பாடல் எண் : 1
வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
ஆனிற்பொலி யைந்தும்அமர்ந் தாடியுல கேத்தத்
தேனிற்பொலி மொழியாளொடு மேயான்திரு நகரே.

பொழிப்புரை :

வளைந்த பிறைமதி வானின்கண் விளங்கும் மழை மேகங்களைக் கிழித்து ஓடிச் சென்று சேரும் குளிர்ந்த சாரலை உடைய கொடுங்குன்றம், பசுவிடம் விளங்கும் பால் நெய் தயிர் கோமயம் கோசலம் ஆகிய ஐந்து பொருள்களையும் மகிழ்ந்தாடி உலகம் போற்றத் தேன்போலும் மொழியினைப் பேசும் உமையம்மையோடு சிவபிரான் மேவிய திருத்தலமாகும்.

குறிப்புரை :

கூனல்பிறை மேகங்கிழித்து ஓடிச்சேருங் கொடுங் குன்றம் எனக்கூட்டுக. மழைமேகம் - சூல்முற்றி மழை பொழியும் மேகம். தேனில் பொலி மொழியாள் -குயில் அமுதநாயகி. இளம்பிறை கனத்த மேகப் படலத்தைக் கிழித்துச் சென்று சேர்தற்கிடமாகிய குளிர்சாரல் குன்று என்றமையால், ஆன்மாக்கள் அநாதியான ஆணவமலப் படலத்தைக் கிழித்துச் சென்று எய்தி, திருவடி நிழலாகிய தண்ணிய இடத்தைச் சாரலாம் என்பது குறித்தவாறு.

பாடல் எண் : 2

மயில்புல்குதண் பெடையோடுட னாடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம்
அயில்வேன்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே.

பொழிப்புரை :

ஆண் மயில்கள் தண்ணிய தம் பெடைகளைத் தழுவித் தோகைவிரித்தாடும் விரிந்த சாரலையும், குயில்கள் இன்னிசை பாடும் குளிர்ந்த சோலைகளையும் உடைய கொடுங்குன்றம், கூரிய வேல்போலும் நெடிய வெம்மையான ஒளியோடு கூடிய அனலைக் கையில் ஏந்தி நின்றாடி முப்புரங்களைக் கணை தொடுத்து அழித்த சிவபிரான் எழுந்தருளிய திருத்தலமாகும்.

குறிப்புரை :

புல்கு - தழுவிய, தண்பெடை என்றது மயிலுக்குள்ள கற்பின் சிறப்புக்கருதி. குயில் இன்னிசைபாடும் சாரல், மயில் தண்பெடையோடு ஆடும் சாரல் என்றது, தன்வசமற்றுப் பாடியும் ஆடியும் செல்லும் அன்பர்க்குக் குளிருஞ்சாரல் கொடுங்குன்றம் என்ற கருத்துத் தொனித்தல் காண்க.

பாடல் எண் : 3

மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக்
குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம்
கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல்
வளர்கொன்றையும் மதமத்தமும் வைத்தான்வள நகரே.

பொழிப்புரை :

அருவிகள், ஒளிவீசும் மணிகள், பசும்பொன், மணமுள்ள மலர்கள் ஆகியவற்றைத் தள்ளிக்கொண்டு வந்து நீரைச் சொரிதலால், குளிர்ந்துள்ள மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், பொங்கி எழும் கங்கையோடு, வெள்ளிய பிறைமதி பொருந்திய சடை, முடிமேல், மணம் வளரும் கொன்றை மலரையும் மதத்தை ஊட்டும் ஊமத்தை மலரையும் அணிந்துள்ள சிவபிரானது வளமையான நகராகும்.

குறிப்புரை :

கிளர்கங்கை - பொங்கும் கங்காநதி. மதமத்தம் - மதத்தையூட்டும் ஊமத்தம்பூ.

பாடல் எண் : 4

பருமாமத கரியோடரி யிழியும்விரி சாரல்
குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம்
பொருமாவெயில் வரைவில்தரு கணையிற்பொடி செய்த
பெருமானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.

பொழிப்புரை :

பெரிய கரிய மதயானைகளும் சிங்கங்களும் இரை தேடவும், நீர் பருகவும் இறங்கிவரும் பெரிய மலைச்சாரலையும், நிறம் பொருந்திய பெரிய மணிகளைப் பொன்னோடு சொரியும் அருவிகளையும் உடைய கொடுங்குன்றம், தன்னோடு பொரவந்த பெரிய முப்புரக் கோட்டைகளை மலை வில்லில் தொடுத்த கணையால் பொடியாக்கிய சிவபிரான் உமையம்மையோடு எழுந்தருளிய பெருநகராகும்.

குறிப்புரை :

கரி - யானை. அரி - சிங்கம். இழியும் - இறங்குகின்ற சாரல். எனவே பகைகொண்ட வலிவுள்ள யானையும் சிங்கமுமாகிய இவ்விரண்டின் வலிமையடங்க, அருவி கிழித்து வருவது போல, கொடுங்குன்றச்சாரலை அடையின் தம்முள் மாறுபட்ட ஆணவக்களிறும், ஐம்பொறிகளாகிய அரிகளும் தம் வலிமையற்றுக் கருணையருவியின் வழியே இழுக்கப்பட்டு அமிழ்த்தப்படும் என்பது அறிவித்தவாறாம்.

பாடல் எண் : 5

மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும்
கூகைக்குல மோடித்திரி சாரற்கொடுங் குன்றம்
நாகத்தொடும் இளவெண்பிறை சூடிந்நல மங்கை
பாகத்தவ னிமையோர்தொழ மேவும்பழ நகரே.

பொழிப்புரை :

மேகத்திடம் இடிக்குரல் தோன்றக் கேட்டுக் கோட்டான் என்னும் பறவை இனங்கள் அஞ்சி மலையினின்றும் இறங்கி வந்து ஓடித்திரியும் மலைச்சாரலை உடைய கொடுங்குன்றம், நாகத்தோடு இளவெண்பிறையை முடியிற் சூடி அழகிய உமை நங்கையை ஒரு பாகமாகக் கொண்டுள்ள சிவபிரான், தேவர்கள் தன்னை வணங்குமாறு எழுந்தருளும் பழமையான நகராகும்.

குறிப்புரை :

கூகைக்குலம் - கோட்டான்களின் கூட்டம். கூகைகள் இருள் வாழ்க்கையுடையன. அவைகள் மேக இடிக்குரல்கேட்டு அஞ்சி மலையை விட்டிறங்கிப் புகலிடம் காணாது திரிகின்றன என்றது, அஞ்ஞானமாகிய வாழ்க்கையையுடைய ஆன்மாக்கள் கருணைமழை பொழியும் இறைவனது மறக்கருணை காட்டும் மொழியைக்கேட்டு மலையை அணுகமுடியாதே அலைவர் என்று குறிப்பித்தவாறு. நலமங்கை - அழகிய உமாதேவி.

பாடல் எண் : 6

கைம்மாமத கரியின்னின மிடியின்குர லதிரக்
கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம்
அம்மானென வுள்கித்தொழு வார்கட்கருள் செய்யும்
பெம்மானவ னிமையோர்தொழ மேவும்பெரு நகரே.

பொழிப்புரை :

துதிக்கையை உடைய கரிய மதயானைகளின் கூட்டம் இடிக்குரல் அதிரக்கேட்டு அஞ்சிக் கொய்யத்தக்க மண மலர்களை உடைய சோலைகளில் புகுந்து ஒளிதற்குச் செறிந்து வரும் கொடுங்குன்றம், இவரே நம் தலைவர் என இடைவிடாது நினைந்து தொழும் அடியவர்கட்கு அருள் செய்யும் சிவபெருமான் விண்ணோர் தன்னைத் தொழ வீற்றிருந்தருளும் பெருநகராகும்.

குறிப்புரை :

கைம்மா - யானை. வெளிப்படைமொழி. யானை, இடியோசையைக்கேட்டுச் சோலைகளிற் புகுகின்றன. இது `நெறி நில்லார் தீயோசைகேட்டு அஞ்சிஓடித் தாணிழல் செல்லும் அன்பரை நினைவூட்டும் நிகழ்ச்சி. அம்மான் - தலைவன். உள்கி - தியானித்து.

பாடல் எண் : 7

மரவத்தொடு மணமாதவி மௌவல்லது விண்ட
குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம்
அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை
நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே.

பொழிப்புரை :

கடம்பு, குருக்கத்தி, முல்லை ஆகியவற்றின் நாள் அரும்புகள் குரவமலர்களோடு விண்டு மணம் விரவும் பொழில் சூழ்ந்த தண்ணிய கொடுங்குன்றம், அரவு, வெள்ளிய இளம்பிறை, மணம் விரவும் கொன்றை மலர் ஆகியவற்றை நிரம்பத் தன் முடிமேல் அணிந்துள்ள சிவபிரானது நெடுநகராகும்.

குறிப்புரை :

மரவம் - கடம்பு. மாதவி - குருக்கத்தி. மௌவல் - முல்லை. நிரவ - நிரம்ப. ஒன்ற என்றுமாம்.

பாடல் எண் : 8

முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து
குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம்
ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே
பிட்டானவ னுமையாளொடு மேவும்பெரு நகரே.

பொழிப்புரை :

யானைக் கூட்டங்கள் யாரும் தடுப்பார் இன்றி முதிய மூங்கில்களை உண்டு வெறுத்துப் பிறரால் அகழப்படாது இயற்கையிலேயே ஆழமாக உள்ள சுனைகளில் இறங்கிநின்று நீராடும் கொடுங்குன்றம், தன்னோடு மனம் பொருந்தாது கயிலை மலையை எடுத்த அரக்கனாகிய இராவணனின் முடியணிந்த பத்துத் தலைகளையும் அடர்த்து ஒடித்தவனாகிய சிவபெருமான் உமையம்மையோடு மேவும் பெருநகராகும்.

குறிப்புரை :

முட்டா - தடையில்லாத. முதுவேய்கள் - முதிர்ந்த மூங்கில்கள். யானைகள் மூங்கிலை முரித்து வைத்துக்கொண்டு சுனைகளில் ஆடுகின்றன. குட்டாச்சுனை - தானே ஆழமான சுனை என்பதாம். குட்டம் - ஆழம். குட்டா - ஆழமாக்கப்படாத. ஒட்டா - பொருந்தாத. பிட்டான் - இரண்டாக ஒடித்தான்.

பாடல் எண் : 9

அறையும்மரி குரலோசையை யஞ்சியடு மானை
குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம்
மறையும்மவை யுடையானென நெடியானென விவர்கள்
இறையும்மறி வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே.

பொழிப்புரை :

சிங்கத்தின் கர்ச்சனை ஓசையைக் கேட்டு அஞ்சிக் கொல்லும் தன்மையினவாகிய யானைகள் மன எழுச்சி குன்றி மலையிடையே உள்ள குகைப் பகுதிகளில் மறைந்து வைகும் கொடுங்குன்றம், வேதங்களுக்கு உரியவனாய நான்முகன் திருமால் ஆகிய இருவரும் சிறிதும் அறிய முடியாதவனாய் நின்ற சிவபிரான் மேவிய அழகிய நகராகும்.

குறிப்புரை :

அறையும் - முன்கால்களால் அறைந்து கொல்லும். அடும் ஆனை - கொல்லும் தன்மைவாய்ந்த மதயானை. குறையும் மனமாகி - வன்மைகுறைந்த மனத்தை யுடையவராகி. முழை - குகை. மறையும் அவை யுடையான் - வேதங்களை யுடையவனாய பிரமன். நெடியான் - திருமால் என்றது. இறையும் - சிறிதும்.

பாடல் எண் : 10

மத்தக்களி றாளிவ்வர வஞ்சிம்மலை தன்னைக்
குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம்
புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப்
பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே.

பொழிப்புரை :

மதம் பொருந்திய யானைகள் தம்மின் வலிய சிங்கம் வருதலைக் கண்டு அஞ்சி மலையைக் குத்திப் பெருமுழையாக்கி, அதனிடை வைகும் கொடுங்குன்றம், புத்தர்களும் பொல்லா மனமுடைய சமணர்களும் புறங்கூறத் தன் பக்தர்கட்கு அருள் செய்பவனாகிய சிவபிரான் மேவிய பழமையான நகராகும்.

குறிப்புரை :

யானை ஆளிவர அஞ்சி, மலையைக் குத்திக்கொண்டு குகையில் தங்குகின்றது என்பதாம்.

பாடல் எண் : 11

கூனற்பிறை சடைமேன்மிக வுடையான்கொடுங் குன்றைக்
கானற்கழு மலமாநகர் தலைவன்னல கவுணி
ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார்
ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.

பொழிப்புரை :

வளைந்த பிறை மதியைச் சடைமுடிமீது அழகு மிகுமாறு அணிந்த சிவபிரானது திருக்கொடுங்குன்றைக் கடற்கரைச் சோலைகளால் சூழப்பட்ட கழுமலமாநகரின் தலைவனும் நல்ல கவுணியர் கோத்திரத்தில் தோன்றியவனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலைகளை ஓதி வழிபட வல்லவர் தம்மிடமுள்ள குறைபாடுகள் நீங்கித்துன்பங்கள் அகன்று உலகம் போற்றும் புகழுடையோராவர்.

குறிப்புரை :

கானல் - கடற்கரைச்சோலை. தலைவன் நல்ல கவுணி - தலைவனாகிய நல்ல கவுண்டின்ய கோத்திரத்துண்டானவன். ஊனம் - குறைபாடு. எழில் - எழுச்சி

Sunday, 2 October 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருவண்ணாமலை

பாடல் எண் : 1
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

பொழிப்புரை :

உண்ணாமுலை என்னும் திருப்பெயருடைய உமையம்மையாரோடு உடனாக எழுந்தருளியவரும், தம் இடப்பாகம் முழுவதும் பெண்ணாகியவருமாகிய சிவபிரானது மலை, அடித்து வரும் அழகிய மணிகள் சுடர்விட மண்ணை நோக்கி வருவனவாகிய அருவிகள் பொருள் புரியாத மழலை ஒலியோடு கூடிய முழவு போல ஒலிக்கும் திருவண்ணாமலை யாகும். அதனைத் தொழுவார் வினைகள் தவறாது கெடும்.

குறிப்புரை :

உமையாளொடும் உடனாகிய ஒருவன் என்றது உமாதேவியை இடப்பாகத்திருத்தி இருக்கிற உடனாய நிலையை உணர்த்தியது. பெண்ணாகிய பெருமான் என்றது உமையம்மையோடு ஒன்றாகிய நிலையை உணர்த்தியது. மழலை முழவு - சொற்றூய்மை யில்லாத முழவொலி. சொல் - மத்தளத்தின் ஜதி ஒலி.

பாடல் எண் : 2

தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
தூமாமழை துறுகன்மிசை சிறுநுண்டுளி சிதற
ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல்
பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.

பொழிப்புரை :

கிளைகளை வளைத்து இனிய மாங்கனிகளை உண்ட ஆண் குரங்குகள் விடுத்த அக்கொம்புகள் வேகமாகத் தீண்டப்படுதலால் தூய மழை மேகங்கள் மலைப் பாறைகளில் சிறிய நுண்ணியவான மழைத்துளிகளைச் சிதறுவதால் காட்டுப்பசுக்கள் மழை எனக்கருதி மர நிழலை அடையும் பொழில்களை உடைய அண்ணாமலை இறைவனின், அழகிய மலர் போன்றனவும் வீரக்கழல் அணிந்தனவுமான சிவந்த திருவடிகளை நினைவார் வினை இலராவர்.

குறிப்புரை :

கடுவன் - ஆண் குரங்கு. விடுகொம்பு - மாம்பழத்தைப் பறித்துவிட்ட மாங்கொம்பு. தூ மா மழை - தூய்மையான கரிய மேகம். துறுகல் - பாறை. ஆமா பிணை - காட்டுப் பசு; பெண்பசுவோடு, ஆமாப் பிணை என்பது எதுகை நோக்கி ஆமாம் பிணையாயிற்று, பூமாங்கழல் - அழகிய மாவிலையின் வடிவந்தோன்றப் புனையப்பட்ட காலணி. மாண் கழலுமாம். நினைக்க முத்தி தரும் தலம் ஆதலின் நினைவார் வினையிலரே என்றார்.

பாடல் எண் : 3

பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல்
ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல்
காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.

பொழிப்புரை :

தோகைகளோடு கூடிய ஆண் மயில்கள் பெண் மயில்களோடு உறையும் பொழில் சூழ்ந்ததும், மூங்கில்கள் சூல் கொண்டு உதிர்க்கும் முத்துக்கள் நிறைந்து சொரிவதும், விரிந்த மலைப் பகுதிகளில் நீர்த் துளிகளோடு கூடிய மழை மேகங்கள் தவழும் பொழில்களை உடையதுமாகிய அண்ணாமலை, இறைவனின், காலனது வலிமையைத் தகர்த்த சிவந்த திருவடிகளைத் தொழுவார் மேலன புகழ்.(தொழுவார் புகழ் பெறுவர் என்பதாம்).

குறிப்புரை :

பீலிம்மயில், ஆலிம்மழை, சூலிம்மணி என்பன விரித்தல் விகாரம். சூலி மணி - சூலிருந்து பெற்ற முத்துக்கள். ஆலி - நீர்த்துளி. திருவடியால் எட்டியுதைத்தார் ஆகலின் காலன் வலிதொலை சேவடி என்றார். புகழ் தொழுவார் எனக்கூட்டுக.

பாடல் எண் : 4

உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம்
எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால்
முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள வடிமேல்
அதிருங்கழ லடிகட்கிடம் அண்ணாமலை யதுவே.

பொழிப்புரை :

உடலிலிருந்து பிரிக்கப்பட்ட மயிர் நீங்கிய பிரமனது வெண்மையான தலையோட்டை உண்கலனாக் கொண்டு, உலகெலாம் திரிந்து ஏற்கும் பலியை உணவாகக் கொள்ளுதற்கு எருது ஏறி வருவதோடு, முதிர்ந்த சடைமுடியின் மீது வெண்பிறையைச் சூடித்திருவடிகளில் அதிரும் வீரக்கழல்களோடு விளங்கும் சிவபிரானுக்குரிய இடம் திருவண்ணாமலையாகும்.

குறிப்புரை :

உதிரும் மயிர் இடு வெண்டலை - சதை வற்றிப் போனதால் உதிர்கின்ற மயிரையுடைய காட்டில் இடப்பெற்ற பிரமகபாலம். எதிரும் பலி - வந்து இடப்பெறும் பிச்சை. பிச்சை ஏற்பார்யாசியாது தெருவிற் செல்ல மகளிர் தாமே வந்து இடுதல் மரபாதலின் அதனை விளக்க எதிரும் பலி என்றார். முதிருஞ்சடை இள வெண்பிறை : முரண்.

பாடல் எண் : 5

மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படும் அண்ணாமலை யண்ணல்
உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரார்
குரவங்கமழ் நறுமென்குழல் உமைபுல்குதல் குணமே.

பொழிப்புரை :

வெண் கடம்பமரம், சிலை, முத்து, மிக்க மணிகள் ஆகியவற்றை உந்திவரும் வெண்மையான அருவிகள் பறைபோல ஆரவாரம் செய்யும் திருவண்ணாமலையில் விளங்கும் அண்ணலாகிய சிவபிரான், சடையில் பாம்பும் கங்கையும் உடனாயிருந்து உலவுவதை ஓராமல், குராமணம் கமழும் மென்மையான கூந்தலை உடைய உமையம்மையாரைத் தழுவுதல் நன்றோ?

குறிப்புரை :

சிலை - ஒருவகை மரம். தரளம் - முத்து. மணி - இரத்தினம். அரவம் - ஒலி, உரவம் - உரகம் என்பதன் திரிபு; பாம்பு. உரகமும், கங்கையும் சடையில் உலாவுதலையும் ஓராமல் உமையாளைத் தழுவுதல் குணமாகுமா என்று வினவுகிறார். புணர்ச்சிக்குத் தனிமை இனியதாய், நாணங்காப்பாகவும். இவர் பாம்பும், கங்கையும் சடைமீது உலாவப் புல்லல் நன்றன்று என்று நகைபடச் சொல்லிற்றாம்.

பாடல் எண் : 6

பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப்
பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக்
கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி
உருகும்மன முடையார்தமக் குறுநோயடை யாவே.

பொழிப்புரை :

பெருகிவரும் அருவி நீரை உடைய திருவண்ணாமலையில் பிறைமதி தோன்றிய பாற்கடலிடைத்தோன்றிய நஞ்சை உட் கொள்ளும் அளவிற்குத்துணிபுடையவரும், அந்நஞ்சினை உண்டு கண்டம் கறுத்தவரும், திருவெண்ணீற்றை அணிந்தவரும், மணம் கமழும் சடைமுடியை உடையவரும் ஆகிய சிவபிரானின் திருவடிகளை வாழ்த்தி உருகும் மனம் உடையவர்கட்கு மிக்க நோய்கள் எவையும் வாரா.

குறிப்புரை :

பிறை சேர் கடல் - ஒருகலைப்பிறை உண்டாதற்கு இடமாகிய பாற்கடல். பருகுந்தனை துணிவார் - உட்கொள்ளும் அளவிற்குத் துணிவுடையவர். பொடி - விபூதி. கருகும் மிடறு - கருமை ஒருகாலைக்கு ஒருகால் மிக்குத்தோன்றும் கழுத்து.

பாடல் எண் : 7

கரிகாலன குடர்கொள்வன கழுதாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள
எரியாடிய விறைவர்க்கிட மினவண்டிசை முரல
அரியாடிய கண்ணாளொடும் அண்ணாமலை யதுவே.

பொழிப்புரை :

கரிந்த கால்களை உடையனவும், குடரைப் பிடுங்கி உண்பனவும் ஆகிய பேய்கள் ஆடும் இடுகாட்டில், நரிகள் உருட்டி விளையாடும் சிரிக்கும் வெண்டலை ஓடுகள் உதைக்கப்பட்டு உருள, கையில் எரி ஏந்தி ஆடும் சிவபெருமான், வண்டுக் கூட்டங்கள் இசை பாடச் செவ்வரிபரந்த கண்களை உடைய உமையம்மையோடு எழுந்தருளிய இடம், திருவண்ணாமலை.

குறிப்புரை :

கரிகாலன - எரிபிணத்தை நுகர எரியில் நிற்பதால் கரிந்துபோன கால்களையுடையன. கழுது - பேய். நரியாடிய - நரிகள் உருட்டி விளையாடிய. எரியாடிய - இடுகாட்டில் தீப்பிழம்பில் நின்றாடிய. அரி - செவ்வரி.

பாடல் எண் : 8

ஒளிறூபுலி யதளாடையன் உமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறூகுரன் மதவாரண வதனம்பிடித் துரித்து
வெளிறூபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை
அளறூபட வடர்த்தானிடம் அண்ணாமலை யதுவே.

பொழிப்புரை :

ஒளி செய்யும் புலித்தோலை ஆடையாகக் கொண்டவனும், உமையம்மை அஞ்சுமாறு பிளிறும் குரலை உடைய மதம் பொருந்திய யானையின் தலையைப் பிடித்து அதன் தோலை உரித்து எளிதாக விளையாடிய விகிர்தனும், இராவணனை மலையின்கீழ் அகப்படுத்தி இரத்த வெள்ளத்தில் அடர்த்தவனும் ஆகிய சிவபெருமானது இடம் திருவண்ணாமலை.

குறிப்புரை :

ஒளிறூபுலியதள் - ஒளிசெய்யும் புலித்தோல், பிளிறூ வெளிறூ அளறூ என்ப சந்தம் நோக்கி நீண்டன. மதவாரணம் - மதம் பிடித்த யானை. வதனம் பிடித்து உரித்து - முகத்தில் திருவடியையூன்றிப் பிடித்துக்கொண்டு உரித்து, வெளிறுபட விளையாடிய -வெள்ளையாக விளையாடிய, வயிரமில்லாத மரத்தை வெளிறு என்றல்போல, கபடமின்றி விளையாடுதலை இங்ஙனம் கூறி இன்புற்றார். அளறுபட - மலைக்கீழகப்பட்டு நசுங்கிச் சேறாக. அடர்த்தான் - நெருக்கியவன்.

பாடல் எண் : 9

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்
தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.

பொழிப்புரை :

விளமரத்தின் கனியை உகுப்பது போல அம் மரவடிவாய் நின்ற அரக்கனை அழித்த கருங்கடல் வண்ணனாகிய திருமாலும், நீரில் கிளர்ந்து தோன்றிய தாமரை மலர்மேல் உறையும் குற்றம் அற்ற புகழாளனாகிய வேதாவும் அடிமுடிகளை அளவிட்டுக் காண இயலாதவாறு அழல் வடிவாய் நின்ற தலைவனும், தளராத தனபாரங்களையும் மலர்ந்த சிரிப்பையும் உடைய உமையம்மையின் கணவனும் ஆகிய சிவபிரானின் திருவடிகளே நமக்குக் காப்பு.

குறிப்புரை :

விளவு ஆர் கனிபட நூறிய கடல்வண்ணன் - விளா மரமாய் நின்ற கபித்தன் அழியக்கொன்ற கண்ணபிரான். கேடில் புகழோன் - அழியாப்புகழ் பெற்ற பிரமன். அளவாவண்ணம் - தம்முட் பகைகொண்டு கலவாதபடி. இது இத்தலத்தில் பிரம விஷ்ணுக்கள் செருக்கிச்செய்த சண்டையைத் தீர்க்கப் பெருமான் தீப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற தலவரலாற்றுக் குறிப்பை விளக்குவது. உண்ணத் தளர்தல் நகிற்கு இயல்பாதலின் உண்ணாமுலை என்பார் தளராமுலை என்றார். தனது நகில் கொண்டும் இறைவனைத் தன்வசமாக்கியவள் என்பது குறிப்பிக்கப் பெற்றது.

பாடல் எண் : 10

வேர்வந்துற மாசூர்தர வெயினின்றுழல் வாரும்
மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும்
ஆரம்பர்த முரைகொள்ளன்மின் அண்ணாமலை யண்ணல்
கூர்வெண்மழுப் படையானல்ல கழல்சேர்வது குணமே.

பொழிப்புரை :

உடலில் வியர்வை தோன்றவும் அழுக்கேறவும் வெயிலில் நின்று உழல்வதைத் தவமாகக் கொள்வோராகிய சமணரும், மரவுரியால் மார்பை மிகவும் மறைத்து வருபவர் ஆகிய புத்தரும் போதிய பயிற்சியின்றித் தொடக்க நிலையில் உள்ளவர்கள் ஆதலின், அவர்களுடைய உரைகளைக் கொள்ளாதீர். திருவண்ணாமலையில் உறையும் தலைவனும் கூரிய வெண்மையான மழுவாயுதத்தைக் கைக்கொண்டவனும் ஆகிய சிவபெருமானது நன்மைதரும் திருவடிகளை அடைதலே மேலான குணம்.

குறிப்புரை :

வேர் - வியர்வை. மாசு - அழுக்கு. சீவரம் - மஞ்சள் நிற ஆடை. மார்பு புலப்படாத வண்ணம் மறைத்தல் சமணத்துறவியர் இயல்பு. ஆரம்பர் - தொடக்க நிலையிலுள்ளார்; ஆரம்பவாதிகள் போதிய பயிற்சியில்லார் என்பதாம். ஆடம்பரமில்லாதவர்கள் என்பதுமாம்.

பாடல் எண் : 11

வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவன் அண்ணாமலை யதனைக்
கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுண் ஞான
சம்பந்தன தமிழ்வல்லவர் அடிபேணுதல் தவமே.

பொழிப்புரை :

வெம்மை மிக்க கதிரவன் ஒளி புகாதவாறு தடுக்கும் விரிந்த சாரலை உடையதும், அம்பைச் செலுத்தி முப்புரங்களை அழித்த சிவபிரான் எழுந்தருளியதுமான அண்ணாமலையைக் கொம்பு என்னும் வாத்தியங்களின் ஒலியைக் கேட்டு, குயில்கள் எதிர் ஒலிக்கும் குளிர்ந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத் தமிழை ஓதவல்லவர்களின் திருவடிகளை வணங்குதல் சிறந்த தவமாம்.

குறிப்புரை :

வெம்பு உந்திய - வெப்பமிக்க, மலையே இறைவன் திருமேனியாதலின் அவனைத் தீண்டிப் பழியேற்க விருப்பின்றி கதிரோன் விலகிச் சென்றான் என்பதாம். கொம்பு ஒருவகை வாத்திய விசேடம். கொம்பு ஊதிய இனிய ஓசையைக் குயில் ஒலிக்கும் காழி. குருவருள்: இப்பாடலின் இறுதிவரி `ஞானசம்பந்தன தமிழ் வல்லவர் அடிபேணுதல் தவமே` என்கின்றது. இத்திருப்பதிகத்தை வல்லவாறு ஓதுவார்களின் அடியை விரும்பிப் போற்றுதலே ஒருவருக்குத் தவமாக அமையும் என்கிறது. இவ்வாறே திருவலஞ்சுழி பற்றிய `விண்டெலாம்` என்ற பதிகத்தின் திருக்கடைக்காப்பாகிய `வீடும் ஞானமும் வேண்டுதிரேல்` என்ற பாடலும், `நாடி ஞானசம்பந்தன செந்தமிழ் கொண்டு இசை பாடும் ஞானம் வல்லார் அடி சேர்வது ஞானமே` என்ற வரிகளால் இப்பதிகத்தை ஓதுவார்களின் அடிசேர்ந்து வாழ்தலே உண்மை ஞானம் கிடைத்தற்கு ஏதுவாம் என்கின்றது. இவ்விரு பாடல்களும் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் அடி போற்றின் தவமும் அதன் வழி ஞானமும் உண்டாம் என்பதை வற்புறுத்துவது காணலாம்.

Sunday, 28 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருச்சிவபுரம்

பாடல் எண் : 1
புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி
திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய
சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெறுவரே.


பொழிப்புரை :
விண், காற்று, தீ, நீர், மண் ஆகிய ஐம்பெரும் பூதங்களையும், எண்ணெண் கலைகளை உரைத்தருளும் வேதங்களையும், முக்குணங்களையும், விரும்பத்தக்க மார்க்கங்களையும், வானுலகில் வாழும் தேவர்கள் முதலியவர்களாய் விளங்கும் உயிர்களையும், தம்முடைய படைப்பாற்றல் நினைவோடு நல்ல தாமரைமலரில் விளங்கும் நான்முகனை அதிட்டித்து நின்று உலகைத் தோற்றுவித்தருளும் சிவபெருமானது சிவபுரத்தலத்தை நினைப்பவர் வளமையான இவ்வுலகில் நிலைபெற்று வாழ்வர்.


குறிப்புரை :
இது இறைவனே சிருட்டித்தொழில் இடையறாது நிகழ்த்தத் திருவுள்ளங் கொள்கின்றார். அத்தொழிலைச் செய்யும் பிரமன் அந்தப்பாவனையில் இருந்து சிருட்டிக்கின்றான். ஆதலால் பவமலி தொழிலது நினைவொடு இருக்கும் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் சிவபுரத்தை நினைப்பவர் நிலைபேறான வாழ்வடைவர் என்கின்றது. புவம், வளி, கனல், புனல், புவி - விண்ணாதி மண்ணந்தமாகிய ஐம்பெரும் பூதங்கள். புவம் - வான், கலை - எண்ணெண் கலைகள். உரைமறை - இறைவன் புகழைச்சொல்லும் வேதம். திரிகுணம் -சத்துவம் முதலிய மூன்று குணங்கள். அமர்நெறி - விரும்பத்தக்க மார்க்கங்கள். திவம் - தேவலோகம். உயிரவை - தேவர் முதலாகத் தாவரம் ஈறாகச்சொல்லப்பட்ட உயிர்கள். அவைதம பவமலி தொழிலது நினைவொடு - அவ்வவ் ஆன்மாக்களுடைய வினைக்கு ஈடாக அருளப்படுகின்ற பிறவிக்கேற்ற சிருட்டித்தொழிலின் நினைவொடு. எனவே இறைவன் பிரமனைப்போல விகாரியாய்ப்படைப்பவனல்லன், இச்சையால் எல்லாம் இயங்குகின்றன என்பது. பதுமநன்மலரது மருவிய சிவன் - தாமரை மலர் மேல் வீற்றிருக்கும் சிவன். சிவபெருமான் பிரமன் உருக்கொண்டு வீற்றிருப்பாரல்லர். இத்தகைய திருவுருவத்தைப்பிரமன் தியானித்தலான் சிருட்டி கைவரப்பெறுவன் என்பது.


பாடல் எண் : 2
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள்
நிலைமலி சுரர் முத லுலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும்
அலைகட னடுவறி துயிலமர் அரியுரு வியல்பர னுறைபதி
சிலைமலி மதிள்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே.


பொழிப்புரை :
மலைகள் பல வளரும் இம்மண்ணுலகில் வேத விதிகளின் படி நடக்கும் மிகுதியான மக்கள், விண்ணில் நிலை பேறுடையவராய் வாழும் தேவர்கள் ஆகியோரும் மற்றுமுள்ள உலக உயிர்களும் நிலைபெற்று வாழ்தற்குரிய காத்தல் தொழில் நினைவோடு, மிகுந்துவரும் அலைகளை உடைய திருப்பாற்கடல் நடுவில் அறிதுயில் அமர்ந்துள்ள திருமாலை அதிட்டித்துநின்று காத்தல் தொழிலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதி, கற்களால் கட்டப்பட்ட மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைப்பவர் திருமகளொடு திகழ்வர்.


குறிப்புரை :
இது எல்லா உலகங்களும் தத்தம் கால எல்லை வரையில் நிலைபெறுக என்னும் திருவுள்ளக் குறிப்போடு பாற்கடல் மேல் பள்ளிகொள்ளும் திருமால் உருவின் இயல்போடு அரன் உறையும்பதி. நினைப்பவர் திருமகளோடு திகழ்வர் என்கின்றது. உலகு நிலைப்பதற்கு மலை இன்றியமையாமையின் மலை பல வளர் தருபுவி எனப் புவியை விசேடித்தார். மறைதரு வழிமலி மனிதர்கள் - வேத விதியின்படி அக ஒழுக்கத்தையும், புறவொழுக்கத்தையும் வரையறுத்தமக்கள். நிலைமலிசுரர் - மக்களைக்காட்டிலும் வாழ்வால் நீடித்த தேவர்கள், முதல் உலகுகள் என்றது, விண்ணும் மண்ணும் கூறவே இடைப்பட்டனவெல்லாம் உணரவைத்தார், அறிதுயில் - யோகநித்திரை.


பாடல் எண் : 3
பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி
குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலமலி தருமுயி ரவையவை
முழுவது மழிவகை நினைவொடு முதலுரு வியல்பர னுறைபதி
செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே.


பொழிப்புரை :
பழுதுபடாத, கடலால் சூழப்பட்ட நிலவுலகம் முதலிய எல்லா உலகங்களையும், அவ்வுலகங்களில் நிறைவுடன் குழுமிவாழும் தேவர்கள் நரகர்கள் மற்றும் மனிதர்கள் ஏனையோர் ஆகிய அனைவர் உயிர்களையும் அழிக்கும் வகையான நினைவோடு உருத்திரனை அதிட்டித்து அவனுருவில் அழித்தலைச் செய்தருளும் சிவபிரான் உறையும் பதியாகிய செழுமையான மணிகள் அழகு செய்யும் சிவபுரநகரைத் தொழுவோரின் புகழ் உலகில் மிகும்.


குறிப்புரை :
இது நிலம் முதலிய உலகுகள் முழுவதுமழியும்படி ருத்திராம்சத்தோடு எழுந்தருளும் இறைவன் பதியைத் தொழுமவர் புகழ் உலகில் மிகும் என்கின்றது. கடல்புடை தழுவியபடி என்றது சங்கார கிருத்தியத்திற்குப் பயன்படும் தண்ணீரைக் கூறி விசேடித்தபடி. படி - பூமி. படி முதலிய உலகுகள் என்றது ஒடுக்க முறைக்கண் பிருதிவி முதலாயின முறையே தத்தம் காரணமாகிய மாயையில் ஒடுங்கும் முறை பற்றி. உயிரவை அவை முழுவதும் அழிவகை என்றது உயிர்கள் ஒடுங்குதலை உயிர்களுக்கு என்றும் அழிவின்மையின். முதல் - இறைவனது உருவாகிய உருத்திரவடிவு.


பாடல் எண் : 4
நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி
நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடியவர்
குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி
சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே.


பொழிப்புரை :
மணம் மிகுந்த சந்தனம், அரும்புகள், இதழ் விரிந்த மலர்கள், குங்கிலியம், சீதாரி முதலிய தூபம், ஒளி வளர் தீபங்கள், நிறைந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு நீராட்டியும், மலர் சூட்டியும் ஒளி காட்டியும் தன்னை நாள்தோறும் நினைவோடு வழிபடும் அடியவர், குறைவிலா நிறைவான சாமீபம் முதலான முத்திகளை அடைய அருள்செய்யும் குணம் உடைய இறைவன் உறையும் அழகிய பதி, நீர் நிலைகள் பலவற்றாலும் வளம் நிரம்பி விளங்கும் சிவபுரமாகும். அதனை நினைபவர் சயமகள் தலைவராவர்.


குறிப்புரை :
இது அபிஷேக ஆராதனைப் பொருள்களோடு நியதியாக வழிபடும் அடியார்களுக்குக் குறைவிலாப் பதத்தைக் கொடுக்கும் மகேச்சுரனது பதியை வழிபடுமவர்கள் செயமகளுக்குத் தலைவராவர் என்கின்றது. நறை மலிதரும் அளறு - மணம் மிகுந்த சந்தனம். முகை நகு மலர் - முகையும் மலரும், புகை - தூபம். ஒளி - தீபம். நினைவொடு - ஈசுவர தியானத்தோடு. நியதமும் - ஒழுங்காக. குறைவிலபதம் - சாமீபம், வனபதி - அழகியநகரம். சிறைபுனல் - மதகுகளோடு கூடிய புனல். இது கிரியாவான்கள் பெறுபயன் கூறியது.


பாடல் எண் : 5
சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொரு ணியதமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை தகுபர னுறைவது நகர்மதிள்
கனமரு வியசிவ புரநினை பவர்கலை மகள்தர நிகழ்வரே.


பொழிப்புரை :
காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் ஆறு பகைகளையும் வென்று, மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் அடக்கும் வகையில், காற்றை நிறுத்தியும் விடுத்தும் செய்யப்படும் பிராணாயாமத்தைப் புரிந்தும், தியானித்தலால் உள்ளத்தில் தோன்றியருளும் ஒளிப்பொருளாகிய சிவபெருமானை நாள்தோறும் உணர்பவராகிய யோகியர்கட்குத் தனது எழிலுருவாகிய சாரூபத்தைத் தந்தருளும் சிவபிரான் உறைந்தருளும் நகர், மேகந் தவழும் மதில்கள் சூழ்ந்த சிவபுரமாகும். அதனை நினைபவர், கலைமகள் தன் அருளைத் தர வாழ்வர்.


குறிப்புரை :
இது அகப்பகை ஆறும் வென்று ஐம்பொறி அடக்கி, பிராணவாயுவை ஒழுங்குபடுத்திய யோகியர்க்குச் சாரூபந் தரும் பரசிவன் பதியாகிய சிவபுரத்தை நினைப்பவர் சாரூபர்களாவார்கள் என்கின்றது. சினமலி அறுபகை - கோபம் முதலிய உட்பகையாறும், இதனை அரிஷட்வர்க்கம் என்பர் வடநூலார். பொறி - ஐம்பொறிகள். பொறிகள் புலன்களைச் சென்று பற்றுவதைத்தடுப்பது பிராணாயாமம் ஒன்றே என்பதாம். மனன் உணர்வு - தியானம். மலர் மிசை எழுதரு பொருள் - பிரமரந்தரத்தின் கண்ணதாகிய சகஸ்ரதளத்தையுடைய தாமரை மலரின்மேல் எழுந்தருளியிருக்கும் பேரொளிப்பிழம்பாகிய பொருளை. நியதமும் உணர்பவர் - அனவரதமும் அறிபவர்கள். தனது எழில் உருவு கொடு - தன்னுடைய அழகிய வடிவத்தைக் கொண்டு. என்றது கண்டக்கறையும் கங்கையும் ஒழிந்த சாரூபத்தை. கனம் - மேகம்.


பாடல் எண் : 6
சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி
அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினையர னுறைபதி
திருவருள் சிவபுர நினைபவர் திகழ்குல னிலனிடை நிகழுமே.


பொழிப்புரை :
வேதங்களையும், பலவாகிய நன்மைகளைத் தரும் தலைமையான கலைகளையும், குற்றம் அறப் பயின்று, உலகியலில் பழி பாவங்களுக்கு அஞ்சித் தூய ஒழுக்க சீலராய் உலகம் புகழ விளங்கி உடலின்கண் உள்ள பொறிகள்வழி ஒழுகாது அரிய தவத்தை மேற்கொண்ட அடியவர்கள் தன் திருவடிகளை அடையும் வகை சங்கற்பிக்கும் சிவபிரான் உறையும் பதி திருவருள் தேங்கிய சிவபுரமாகும். அத்தலத்தை நினைவோர்தம் விளக்கமான குலம் உலகிடை நின்று நிகழும்.


குறிப்புரை :
வேதம் முதலான கலைகளைக் குற்றமறப்பயின்று உலகம் புகழ, பொறிவாயில் அவித்து, அருந்தவம் முயல்வார்கள் திருவடி ஞானத்தைப்பெறத் திருவுளங்கொண்டருள்கின்ற பரமசிவன் உறை பதியைச் சிந்திப்பவர் குலம் நிலத்திடை நீடுவாழும் என்கின்றது. பலநலமுதல்கலை - பலவாகிய நன்மைகளைக் கருதுகின்ற கலை. துகள் அறுவகை - சந்தேக விபரீதங்கள் அறும்படி, உருவு இயல் - தோற்றத்தின் அழகு. தனது அடி அடைவகை: இது சாயுச்சியம் அளிப்பது அறிவித்தது.


பாடல் எண் : 7
கதமிகு கருவுரு வொடுவுகி ரிடைவட வரைகண கணவென
மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறத னுதிமிசை
இதமமர் புவியது நிறுவிய வெழிலரி வழிபட வருள்செய்த
பதமுடை யவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே.


பொழிப்புரை :
திருமால் வராக அவதாரத்தில் சினம்மிக்க கரிய உருவோடு, தனது நகங்களிடையே வடக்கின்கண் உள்ள மேருமலை கணகண என ஒலி செய்ய, மதம் மிக்க நீண்ட அவ்வராகத்தின் முகத்திற் பொருந்திய வளைந்த பிறை போன்ற எயிற்றின் முனைக்கண் பூமி இதமாக அமர்ந்து விளங்க, அப்பூமியை உலகின்கண் அவியாது நிறுத்திக் காத்த அழகிய திருமால் வழிபட, அவர்க்கு அருள்புரிந்த திருவடிகளை உடையவனாகிய சிவபெருமான் எழுந்தருளிய சிவபுரத்தை நினைப்பவர் உலகிற் புகழோடு விளங்குவர்.


குறிப்புரை :
ஆதிவராகமான அரிவழிபட அருள் செய்தவரது சிவபுரத்தை நினைபவர் என்றும் விளங்குவர் என்கின்றது. கதம் மிகு - கோபம் மிகுந்த. கருவுருவொடு - கறுத்த மேனியோடு. உகிர்இடை - நகங்களின் இடையே. மதம் மிகு நெடுமுகன் அமர் - மதம் மிக்க நீளமான முகத்திலே இருக்கின்ற. வளைமதி திகழ் எயிறு - பிறை மதியையொத்த கோரப்பல். நுதி - நுனி. இதம் அமர் புவி - இன்பத் தோடு இருக்கின்ற பூமி. ஆதிவராக உருவெடுத்த திருமாலின் சத்தி பூமியாதலின், அவள் வராகத் தந்தத்தில் இதமாக இருந்தாள் என்றார். பதம் - திருவடி.


பாடல் எண் : 8
அசைவுறு தவமுயல் வினிலயன் அருளினில் வருவலி கொடுசிவன்
இசைகயி லையையெழு தருவகை யிருபது கரமவை நிறுவிய
நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ் வுடையரே.


பொழிப்புரை :
உடல் வருத்தத்தைத் தரும் கடுமையான தவத்தைச் செய்து நான்முகன் அருளினால் வரமாகக் கிடைக்கப் பெற்ற வலிமையைக் கொண்டு சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை அது பெயரும்வகையில் இருபது கரங்களை அம்மலையின் கீழ்ச்செலுத்திய இராவணனின் பத்துத் தலைகளில் உள்ள முடிகள் சிதறுமாறு தனது ஒரு கால் விரலால் அடர்த்துத் தன் வலிமையை அவனுக்கு உணர்த்தி அவனைப் பணி கொண்டருளும் சிவபிரான் உறையும் பதி, எண் திசைகளிலும் புகழ் நிறைந்த சிவபுரமாகும். அத்தலத்தை நினைபவர் வளமான இவ்வுலகில் எஞ்ஞான்றும் வாழ்வர்.


குறிப்புரை :
இது பிரமன் அருளால் வந்த தவவலிமையைக் கொண்டு இறைவனது கயிலையையெடுத்த இராவணனது முடியை நெரித்த முதல்வன் நகரத்தை நினைபவர் உலகத்தில் என்றும் வாழ்வர் என்கின்றது. அசைவுஉறுதவம் - வருத்தம்மிக்க தவம். முயல் வினில் - முயன்றதால். நிசிசரன் - இராவணன்.


பாடல் எண் : 9
அடன்மலி படையரி யயனொடு மறிவரி யதொரழன் மலிதரு
சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடு துதியது செயவெதிர்
விடமலி களநுத லமர்கண துடையுரு வெளிபடு மவனகர்
திடமலி பொழிலெழில் சிவபுர நினைபவர் வழிபுவி திகழுமே.


பொழிப்புரை :
வலிமை மிக்க சக்கராயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட திருமாலும் நான்முகனும் அறிதற்கரிய வகையில் அழல்மிக்க பேரொளிப்பிழம்பாய் வெளிப்பட்டருள அதனைக் கண்ட அவர்கள், அச்சங் கொண்டு துதி செய்த அளவில் அவர்கட்கு எதிரே விடம் பொருந்திய கண்டமும் நெற்றிக் கண்ணும் உடைய தனது உருவத்தோடு காட்சி நல்கிய சிவபிரான் எழுந்தருளிய தலம், உறுதியான மரங்கள் செறிந்த பொழில்கள்சூழ்ந்த எழில் பெற்ற சிவபுரமாகும். அதனை நினைபவரும் அவர் மரபினரும் உலகில் புகழோடு விளங்குவர்.


குறிப்புரை :
அயன் மால் இவர்களுக்கிடையே அழல் வண்ணராய்த் தோன்றி, அவர்கள் துதிசெய்யக் கண்ணுதல் கண்டக் கறையோடு கூடிய தனதுருவத்தைக்காட்டிய இறைவன் நகரத்தை நினைப்பவர் வைத்தபடி உலகம் நடக்கும் என்கின்றது. அடல் மலிபடை - வலிமை மிக்க சக்கரம். அவர் வெருவொடு துதி அது செய்ய -அவர்கள் அச்சத்தோடு துதிக்க (அதற்காக இரங்கி) வெளிபடுமவன் எனக் கூட்டுக. விடமலிகளம் - நீலகண்டம். நுதலமர் கண் அது உடை உரு - நெற்றிக் கண்ணையுடைய உரு. நினைபவர் வழி புவிதிகழும் எனப்பிரிக்க. வழி - வமிசம்.


பாடல் எண் : 10
குணமறி வுகணிலை யிலபொரு ளுரைமரு வியபொருள் களுமில
திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை
உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினினல
கணமரு வியசிவ புரநினை பவரெழி லுருவுடை யவர்களே.


பொழிப்புரை :
குணங்களும் அறிவும் நிலையில்லாதன எனவும், காணப்படும் உலகப் பொருள்களும், உரைக்கும் உரையால் உணர்த்தப்படும் ஏனைய பொருள்களும், அவ்வாறே அழிந்து தோன்றுமியல்பின, இது திண்ணம் எனவும், கணபங்க வாதம் புரியும் கேட்டிற்குக் காரணமான அறிவினராகிய புத்தர்களும், தமது கையில் நிறைந்த உணவை வாங்கி உண்ணும் சமணர்களும், உணர்தற்கரிய சிவபிரான் உறையும் பதி, இவ்வுலகில் நல்லவர்கள் திரளாய் வாழும் சிவபுரமாகும். அதனை நினைப்பவர் அழகிய உருவோடு விளங்குவர்.


குறிப்புரை :
குணம் அறிவு முதலாயின நிலையில்லாதன; உலகப்பொருள்களும் அங்ஙனமே என்னும் கணபங்கவாதிகளான புத்தர்களும் சமணர்களும் அறிவரிய அரன்பதியை நினைப்பவர் அழகான வடிவத்தையடைவர் என்கின்றது. குணம் அறிவுகள் நிலையில எனப்பிரிக்க. செதுமதி - குற்றம் பொருந்திய புத்தி. கை உணல் உடையவர் - கையில் பிச்சையேற்றுண்ணும் சமணர்.


பாடல் எண் : 11
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்
நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.


பொழிப்புரை :
இவ்வுலகில் புகழால் விளங்கும் சிவபுரநகரில் எழுந்தருளிய சிவபெருமானின் திருவடி இணைகளைப் பணிகின்ற சிரபுரநகர்த் தலைவனும், தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் பாடிய உரைச்சிறப்பு வாய்ந்த இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் ஓதி வழிபடுபவர் குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெறுவர்.


குறிப்புரை :
இதுவரை பாடல்தோறும் சிவனியல்பும், அவர் எழுந்தருளியுள்ள நகரழகும், அவரை அடைவார் அடைந்து வந்த பயன்களும் கூறிவந்த பிள்ளையார் இப்பாட்டில் இப்பதிகத்தைப் படிப்பார் எய்தும் பயனைத் தொகுத்துக் கூறுகின்றார். குலம் (6) நிலம் (8) நிறை திரு (2) உரு (10) சயமகள் (4) கலைமகள் (5) புகழ் (3) புவி வளர்வழி (9) அடிமை (7) இவ்வாறு இப்பதிகப்பயன் ஒவ்வொரு பாடலிலும் இருப்பதை ஓர்ந்து உணர்க.

Saturday, 27 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருவீழிமிழலை

பாடல் எண் : 1
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட வரவுகொ
டடலசு ரரொடம ரர்களலை கடல்கடை வுழியெழு மிகுசின
விடமடை தருமிட றுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே.


பொழிப்புரை :
பெரியதாகிய மந்தரமலையை மத்தாக நிறுத்தி, அழல் போலும் கொடிய நஞ்சை உமிழும் படத்தோடு கூடிய வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கட்டி வலிய அசுரர்களோடு தேவர்கள் அலைகள் பொருந்திய திருப்பாற்கடலைக் கடைந்த விடத்துத்தோன்றிய உக்கிரமான ஆலகாலம் என்னும் நஞ்சு அடைந்த கண்டத்தை உடையவனும், விடையின்மீது வருபவனும் ஆகிய சிவபிரான் உறையும் தலம், நான்மறைகளை முறையாக ஓதி உணர்ந்த உறுதி வாய்ந்த மறையவர் நிறைந்துள்ள திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
தேவர்கள் பாற்கடல் கடைந்த வரலாறு முதல் மூன்று அடிகளில் குறிக்கப்பெறுகிறது. தடம் நிலவிய மலை -விசாலமாகிய மந்தர மலை. அரவுகொடு அடல் அசுரரொடு அமரர்கள் அலை கடல் கடைவுழி எனப்பிரிக்க. திடம் - மனஉறுதி. மறையவர் என்ற பெயர் மறையைமுறையே உணர்தலால் வந்தது எனக் காரணக்குறியாதல் விளக்கியவாறு.


பாடல் எண் : 2
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரனது
வரையன தலைவிசை யொடுவரு திகிரியை யரிபெற வருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடன்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே.


பொழிப்புரை :
மண்ணுலகத்தோடு விண்ணுலகையும் நலிவுறுத்துகின்ற வலிமை பொருந்திய சலந்தராசுரனின் மலைபோன்ற தலையை வேகமாக அறுத்து வீழ்த்திய சக்கராயுதத்தைத் திருமால் வேண்ட அவர்க்கு அருளியவனும், புகழால் மிக்க கங்கை நதி மதி ஆகியன பொதிந்த சடைமுடியை உடையவனுமாகிய சிவபெருமான் உறையும் தலம், பெரிய அலைகளை உடைய கடற்கரை, மணலால் அழகுபெறும் மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
முதல் இரண்டடிகள் சலந்தரன் சிரங்கொய்த சக்கரத்தைத் திருமாலுக்கருளியது குறிக்கப்படுகிறது. திவிதலம் - விண்ணுலகம். சலதரன் - சலந்தராசுரன். வரையன தலை - மலையையொத்த அவனது தலை. திகிரி - சக்கராயுதம், திருமால் ஆயிரம் தாமரை கொண்டு அருச்சித்தமைக்காகச் சக்கராயுதம் அருளினார் என்பது இத்தல வரலாறு. உரைமலிதரு - புகழ் மலிந்த. சுரநதி - தேவகங்கை. கடற்கரை மணல் மேடுகள் நிறைந்த திருவீழிமிழலை என்பது சிந்திக்கத்தக்கது. அவர்கள் காலத்து இத்தலம் நெய்தல் வேலியாக இருந்திருக்கும் போலும்.


பாடல் எண் : 3
மலைமக டனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமன வனதுயர்
தலையினொ டழலுரு வனகர மறமுனி வுசெய்தவ னுறைபதி
கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே.


பொழிப்புரை :
மலைமகளாகிய பார்வதிதேவியை இகழ்ந்த அறிவற்ற அற்பபுத்தியையுடைய தக்கனுடைய தலையோடு அழலோனின் கை ஒன்றையும் அரிந்து, தன் சினத்தை வெளிப்படுத்திய சிவபிரான்உறையும் தலம், கலை ஞானம் நிரம்பிய புலவர்களின் வறுமைத் துன்பம் நீங்க நிறைந்த செல்வத்தை வழங்கும் கொடையாளர்கள் வாழ்வதும் பெரிய மதில்களால் சூழப் பெற்றதும் விளங்குகின்ற பொழில்கள் வளர்வதுமாய திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
முதல் இரண்டடிகளில் தக்கன் சிரங்கொய்த வரலாறும், அக்கினியைக் கையரிந்த வரலாறும் குறிக்கப்படுகின்றன. மதியறுசிறுமனவன் - புத்திகெட்ட சிறுமனத்தையுடைய தக்கன். உயர்தலை -மனிதத் தலை. அழல் உருவன கரம் - தீவடிவினனாகிய அக்கினியினது கை. சிலை மலிமதிள் - மலையைப் போன்ற மதில்கள். இத்தலத்திலுள்ள கொடையாளிகள் புலவர்களின் துன்பங்களைக் களைகின்றார்கள்.


பாடல் எண் : 4
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய
பெருவலி யினனல மலிதரு கரனுர மிகுபிண மமர்வன
இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரனினி துறைபதி
தெருவினில் வருபெரு விழவொலி மலிதர வளர்திரு மிழலையே.


பொழிப்புரை :
பகைமை பாராட்டிய திரிபுராதிகளின் முப்புரங்களும் எரியில் அழியுமாறு கணை ஒன்றைச் செலுத்திய பெருவலி படைத்தவனும், நன்மைகள் நிறைந்த திருக்கரங்களை உடையவனும், வலிய பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் நள்ளிருட்போதில் சென்று அங்குத் தன்னை வந்தடைந்த பேய்களோடு நடனமாடி இசை பாடுபவனுமாகிய பரமன் மகிழ்வோடு உறையும் பதி, தெருக்கள் தோறும் நிகழும் பெருவிழாக்களின் ஆரவாரம் நிறைந்து வளரும் திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது இறைவனது திரிபுரமெரித்த வீரத்தையும், கைவண்மையையும், சுடுகாட்டில் நடமாடிய செயலையும் குறிப்பிடுகிறது. மருவலர் - பகைவர்; திரிபுராதிகள். நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த திருக்கரங்களையுடையவன். உரமிகுபிணம் - வலிமைமிக்க பிணங்கள். அமர்வன இருள் இடை அடை உறவொடு நடை விசை உறு பரன் எனப் பிரிக்க.


பாடல் எண் : 5
அணிபெறு வடமர நிழலினில் அமர்வொடு மடியிணை யிருவர்கள்
பணிதர வறநெறி மறையொடும் அருளிய பரனுறை விடமொளி
மணிபொரு வருமர கதநில மலிபுன லணைதரு வயலணி
திணிபொழி றருமண மதுநுகர் அறுபத முரல்திரு மிழலையே.


பொழிப்புரை :
அழகிய கல்லால மரநிழலில் எழுந்தருளியிருந்து தம் திருவடி இணைகளைச் சனகர் சனந்தனர் ஆகிய இருவர் ஒருபுறமும், சனாதனர் சனற்குமாரர் ஆகிய இருவர் மறுபுறமும் பணிய அவர்கட்கு அறநெறியை வேதங்களோடும் அருளிச்செய்த சிவபிரான் உறையும் இடம், ஒளி பொருந்திய மணிகள் ஒப்பில்லாத மரகதம் ஆகியவற்றை அடித்துவரும் ஆற்று நீர் நிலமெல்லாம் நிறைந்து வளங்களால் அணி செய்யப் பெறுவதும் செறிந்த பொழில்கள் தரும் மணத்தை நுகரும் வண்டுகள் முரல்வதுமான திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு உரைத்தவரலாறு அறிவிக்கிறது. வடமரநிழல் - ஆலநிழல். அமர்வு - விருப்பம். இருவர்கள் - சனகர் முதலிய நால்வரும், இடப்பக்கத்தும் வலப்பக்கத்தும் இருவர் இருவராக இருந்தமை கருதற்குரியது. மறை - இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டும் அநுபவநிலை. பொழில்தரு மணமது நுகர் அறுபதம் முரல் திருமிழலை எனப் பிரிக்க.


பாடல் எண் : 6
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல்
விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து
அசைவில படையருள் புரிதரும் அவனுறை பதியது மிகுதரு
திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே.


பொழிப்புரை :
குற்றமற்ற வலிய வேடர் உருவைக் கொண்டு, நினைதற்கும் அரிய கடுந்தவத்தைச் செய்யும் விசயனுடைய வலிமையை உமையம்மைக்கு அறிவுறுத்தும் வகையில் அவனோடு வலிய போரைத் தன் வலிமை தோன்றச் செய்து அவ்விசயனுக்குத் தோல்வி எய்தாத பாசுபதக் கணையை வழங்கி அருள்புரிந்த சிவபிரான் உறையும் பதி, செறிந்த மரங்கள் திசைகள் எங்கும் மலர்கள் பூத்துக் குலாவும் செறிந்த பொழில்கள் நிறைந்துள்ள திருவீழிமிழலை யாகும்.


குறிப்புரை :
இது விசயன் வீரத்தை உமாதேவிக்குக் காட்டிப் பாசு பதம் அருளிய வீரம் குறிப்பிடுகிறது. வசையறு வலி - குற்றமற்ற வலிமை. வனசர உருவு - வேட உருவம். நினைவரு தவம் - முனிவர் எவரும் நினைத்தற்கரிய கடுந்தவம், மிடல் - வலிமை, அசைவில படை - தோற்காத பாசுபதாஸ்திரம்.


பாடல் எண் : 7
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை யொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவ னுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவ னுறைபதி
திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே.


பொழிப்புரை :
நன்மைகள் பலவும் நிறைந்த வேத மந்திரங்களை ஓதி, ஆற்று நீர், மணப்புகை, தீபம், மலர்கள் ஆகியனவற்றைக் கொண்டு பூசை புரிந்து வழிபடும் மறையவனாகிய மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த வஞ்சகம் மிக்க இயமனின் உயிர் கெடுமாறு உதைத்தருளிய சிவபிரான் உறையும்பதி, உலக மக்கள் திலகம் எனப்புகழ்வதும் பொழில்கள் சூழ்ந்துள்ளதுமான திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது மார்க்கண்டேயற்காகக் காலனை உதைத்த வரலாற்றைக் கூறுகிறது. மறைமொழியொடு - வேதமந்திரங்களொடு. நதியுறு புனல் - தேவகங்கையின் திருமஞ்சனதீர்த்தம். புகை ஒளி முதல் - தூபம் தீபம் முதலான ஆராதனைப் பொருள்கள். மறையவன் - மார்க்கண்டேயன். சலம் மலிதரு மறலி - வஞ்சம் மிகுந்த இயமன். உலகுகள் திலகம் இது எனப் புகழ்தரு பொழில் அணிமிழலை எனமாறிக் கூட்டுக.


பாடல் எண் : 8
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது
கரமிரு பதுநெரி தரவிரல் நிறுவிய கழலடி யுடையவன்
வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய
சிரமது கொடுபலி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே.


பொழிப்புரை :
சிவபிரான் எழுந்தருளிய கயிலைமலையை நிலைகுலையச் செய்து அதனைப் பெயர்த்த பத்துத் தலைகளை உடைய இராவணனுடைய இருபது கரங்களும் நெரியுமாறு தன் கால்விரலை ஊன்றிய வீரக்கழல் அணிந்த திருவடிகளை உடையவனும், வரன் முறையால் உலகைப் படைக்கும் பூவின் நாயகனான பிரமன் வழிவழுவியதால் ஐந்தாயிருந்த அவன் சிரங்களில் ஒன்றைக் கிள்ளி எடுத்து அதன்கண் பலியேற்றுத் திரிபவனுமாகிய சிவபிரான் உறையும் பதி திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது வழக்கம்போல இராவணன் வரலாறு கூறுகிறது. தசமுகன் - இராவணன். வரன்முறை உலகவைதரும் மலர்வளர் மறையவன் - அந்தந்த ஆன்மாக்களுக்கு வகுக்கப்பெற்ற நியதி தத்துவத்தின் வழிநின்று உலகம் உடல் போகம் இவற்றைப்படைக்கின்ற பிரமன். வழிவழுவிய - உமாதேவியாரை இகழ்ந்ததாகிய தவறு இழைத்த.


பாடல் எண் : 9
அயனொடு மெழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர்
பயமுறு வகைதழ னிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை
சயசய வெனமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி
செயநில வியமதின் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே.


பொழிப்புரை :
நான்முகனும் அழகிய மலர்மகள் கேள்வனாகிய கண்ணனும் அளவிடமுடியாது அஞ்சி நிற்க, ஒரு சோதிப்பிழம்பாய்த் தோன்ற அவ்விருவரும் முறையாக சயசய எனப்போற்றித் துதிசெய்யுமாறு அண்டங்கடந்த அச்சிவபிரான் உறையும் பதி, வெற்றி விளங்கும் மதில்களில் மதி தோய்ந்து செல்லுமாறு உயர்ந்து தோன்றும் திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது அயனும் மாலும் அறியாத அழல் உருவாய் நின்ற வரலாற்றை அறிவிக்கிறது. மலர் மகள் மகிழ் கணன் - திருமகள் மகிழும் கண்ணனாகிய திருமால். தழல் நிகழ்வதொர்படி உருவது வர - தீப்பிழம்பாக ஒளிரும் திருமேனி பொருந்த, வெளி உருவிய அவன் - ஆகாயத்தைக் கடந்த அவன்; செயம் நிலவிய மதில் - வெற்றி விளங்குகின்ற மதில்.


பாடல் எண் : 10
இகழுரு வொடுபறி தலைகொடும் இழிதொழின் மலிசமண் விரகினர்
திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடவடி யவர்மிக வருளிய
புகழுடை யிறையுறை பதிபுனல் அணிகடல் புடைதழு வியபுவி
திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திரு மிழலையே.


பொழிப்புரை :
பிறரால் இகழத்தக்க உருவோடும் உரோமங்களைப் பறித்தெடுத்தலால் முண்டிதமான தலையோடும் இழி தொழில் மிகுதியாகப்புரியும் சமணர்களாகிய தந்திரசாலிகளும், விளங்கும் மருதந்துவராடையை உடலில் போர்த்துத் திரியும் சாக்கியர்களும் அழிந்தொழியத்தன் அடியவர்களுக்கு மிகவும் அருள் புரிபவனும் புகழாளனுமாகிய இறைவன் உறையும் பதி நீர்வளம் மிக்கதும் கடலாற் சூழப்பட்ட இவ்வுலகில் விளங்கும் சுரர் தருவாகிய கற்பகம் போன்ற கொடையாளர் மிக்கு விளங்குவதுமாகிய திருவீழிமிழலையாகும்.


குறிப்புரை :
இது சமணர்கெட அடியவர்க்கருளியதையறிவிப்பது. இகழ் உரு - பிறரால் இகழத்தக்க வடிவம். துவர் உடை உடல் பொதிபவர் - உடல் முழுவதும் போர்த்து மூடும் புத்தர். சுரர்தரு நிகர் கொடையினர் - கற்பக விருட்சத்தையொத்த கொடையினையுடையவர்.


பாடல் எண் : 11
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமிழ லையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும்
மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர இருநில னிடையினி தமர்வரே.


பொழிப்புரை :
சினவேகத்தோடு வந்த யானையை உரித்துப்போர்த்த சிவபிரான் எழுந்தருளிய திருவீழிமிழலையை, மிக்க செல்வங்களால் நிறைந்த மனமகிழ்வுடையவர் வாழும் சிவபுரநகரின் மன்னனும் தமிழ் விரகனுமாகிய ஞானசம்பந்தன் உரைத்த இத்திருப்பதிகப்பாடல்கள் பத்தையும் மனமகிழ்வோடு பயில்பவர் அழகிய திருமகள், கலைமகள், சயமகள், அவர்க்கு இனமான புகழ்மகள் ஆகியோர் தம்பால் பொருந்த, பெரிய இவ்வுலகின்கண் இனிதாக வாழ்வர்.


குறிப்புரை :
இது பயன்கூறித்திருக்கடைக்காப்பருளுகிறது. தனமிகு மனர் - செல்வம் மிகுந்த மனத்தையுடையவர். சிரபுரம் - சீகாழி, இப்பதிகத்தைப் பரிவொடு பயில்வார் திருமகள் கலைமகள் வெற்றிமகள் புகழ்மகள் பொருந்தப் பூமியில் நீடுவாழ்வார் என்பதாம்.