கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday 4 October 2011

சரஸ்வதி அந்தாதி

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய வுணர்விக்கு மென்னம்மை - தூய
வுருப் பளிங்கு போல் வாளென் உள்ளத்தின் உள்ளே
யிருப்பளிங்கு வாரா திடர்.


படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ்பூந் தாமரை போற் கையுந் - துடியிடையும்
அல்லும் பகலும் அனவரத முந்துதித்தால்
கல்லுஞ்சொல் லாதோ கவி.


சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற்
றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற்
பார்தந்த நாத னிசைதந்த வாரணப் பங்கயத்தாள்
வார்தந்த சோதி யம்போருகத் தாளை வணங்குதுமே. 


வணங்குஞ் சிலைநுதலுங் கழைத்தோளும் வனமுலை மேற்
சுணங்கும் புதிய நிலவெழு மேனியுந் தோட்டுடனே
பிணங்குங் கருந்தடங் கண்களு நோக்கிப் பிரமனன்பால்
உணங்குந் திருமுன் றிலாய் மறைநான்கும் உரைப்பவளே.


உரைப்பா ருரைக்குங் கலைகளெல்லாம் எண்ணில் உன்னையன்றித்
தரைப்பா லொருவர் தரவல்ல ரோதண் டரளமுலை
வரைப்பா லமுதுதந் திங்கெனை வாழ்வித்த மாமயிலே
விரைப்பா சடைமலர் வெண்டா மரைப்பதி மெல்லியலே


இயலானதுகொண்டு நின்றிரு நாமங்க ளேத்துதற்கு
முயலா மையாற்றடு மாறுகின்றே னிந்த மூவுலகும்
செயலால் அமைத்த கலைமகளே நின் திருவருளுக்கு
அயலா விடாம லடியேனையும் உவந்து ஆண்டருளே


அருக்கோ தயத்தினும் சந்திரோ தயமொத் தழகெறிக்கும்
திருக்கோல நாயகி செந்தமிழ்ப் பாவை திசைமுகத்தான்
இருக்கோ துநாதனுந் தானுமெப் போதுமினி திருக்கு
மருக்கோல நாண்மல ராள் என்னை யாளு மடமயிலே


மயிலே மடப்பிடியே கொடியே இளமான் பிணையே
குயிலே பசுங்கிளியே அன்னமே மனக்கூ ரிருட்கோர்
வெயிலே நிலவெழு மேனிமின் னேயினி வேறுதவம்
பயிலேன் மகிழ்ந்து பணிவேன் உனதுபொற் பாதங்களே


பாதாம் புயத்திற் பணிவார் தமக்குப் பலகலையும்
வேதாந்த முத்தியுந் தந்தருள் பாரதிவெள் ளிதழ்ப்பூஞ்
சீதாம் புயத்தி லிருப்பா ளிருப்பவென் சிந்தையுள்ளே
ஏதாம் புவியிற் பெறலரி தாவதெனக் கினியே


இனிநான் உணர்வ தெண்ணெண் கலையாளை இலகுதொண்டைக்
கனிநாணுஞ் செவ்விதழ் வெண்ணிறத் தாளைக் கமலவயன்
றனிநாயகியை அகிலாண்ட மும்பெற்ற தாயைமணப்
பனிநாண் மலர் உறை பூவையை யாரணப் பாவையையே


ஒருத்தியை யொன்றுமி லாவென் மனத்தினு வந்துதன்னை
இருத்தியை வெண்கமலத் திப்பாளை யெண்ணெண் கலைதோய்
கருத்தியை யைம்புலனுங் கலங்காமற் கருத்தை யெல்லாம்
திருத்தியை யான்மற வேன்றிசை நான்முகன் தேவியையே.

தேவருந் தெய்வப் பெருமானு நான்மறை செப்புகின்ற
மூவருந் தானவரா கியுள் ளோருமுனி வரரும்
யாவரு மேனையவெல் லாவுயிரு மிதழ் வெளுத்த
பூவரு மாதினருள் கொண்டுஞா னம்புரி கின்றதே.


புரிகின்ற சிந்தையி னூடே புகுந்துபுகுந் திருளை
அரிகின்ற தாய்கின்ற வெல்லா வறிவினரும் பொருளைத்
தெரிகின்ற வின்பங் கனிந்தூறி நெஞ்சந்தெ ளிந்துமுற்ற
விரிகின்ற தெண்ணெண் கலைமானுணர்த்திய வேதமுமே. 

 
வேதமும் வேதத்தி னந்தமு மந்தத்தின் மெய்ப்பொருளாம்
பேதமும் பேதத்தின் மார்க்கமு மார்க்கப் பிணக்கறுக்கும்
போதமும் போதவுரு வாகியெங் கும்பொதிந் தவிந்து
நாதமு நாதவண் டார்க்கும்வெண் டாமரை நாயகியே.



பாவுந் தொடையும் பதங்களும் சீரும் பலவிதமா
மேவுங் கலைகள் விதிப்பா ளிடம்விதியின் முதிய
நாவும் பகர்ந்ததொல் வேதங்கள் நான்கு நறுங்கமலப்
பூவுந் திருப்பதம் பூவா லணிபவர் புந்தியுமே


புந்தியிற் கூரிரு ணீக்கும்புதிய மதிய மென்கோ
வந்தியிற் றோன்றிய தீபமென்கோ நல்லரு மறையோர்
சந்தியிற் றோன்றுந் தபனனென் கோமணித்தா மமென்கோ
உந்தியிற் றோன்றும் பிரான்புயந் தோயு மொருத்தியையே


நாயக மான மலரக மாவதுஞான வின்பச்
சேயக மான மலரக மாவதுந் தீவினையா
லேயக மாறி விடுமக மாவது மெவ்வுயிர்க்குந்
தாயக மாவதுந் தாதார்சு வேதச ரோருகமே.

சரோருக மேதிருக் கோயிலுங் கைகளுந் தாளிணையும்
உரோரு கமுந்திரு வல்குலு நாபியுமோங் கிருள்போற்
சிரோருகஞ் சூழ்ந்த வதனமு நாட்டமுஞ் சேயிதழும்
ஒரோருக மீரரை மாத்திரை யானவுரை மகட்கே.


கருந்தா மரைமலர் கட்டாமரை மலர்கா மருதாள்
அருந்தா மரைமலர் செந்தாமரை மலரா லயமாத்
தருந்தா மரைமலர் வெண்டாமரை மலர்தாவி லெழிற்
பெருந்தா மரைமணக்குங் கலைக்கூட்டப் பிணைதனக்கே.

தனக்கே துணிபொரு ளென்னுந் தொல்வேதஞ் சதுர்முகத்தோன்
எனக்கே சமைந்த வபிடேக மென்னு மிமையவர்தா
மனக்கேத மாற்றுமருந் தென்ப சூடுமலரென் பன்யான்
கனக்கேச பந்திக் கலைமங்கை பாத கமலங்களே.


கமலந்தனி லிருப்பாள் விருப்போ டங்கரங் குவித்துக்
கமலங்கடவுளர் போற்றுமென் பூவை கண்ணிற் கருணைக்
கமலந்தனைக் கொண்டுகண் டொருகாற் றங்கருத்துள் வைப்பார்
கமலங் கழிக்குங் கலைமங்கை யாரணி காரணியே.

காரணன் பாகமுஞ் சென்னியுஞ் சேர்தரு கன்னியரும்
நாரண னாக மகலாத் திருவுமொர் நான்மருப்பு
வாரணன் தேவியு மற்றுள்ள தெயவ மடந்தையரும்
ஆரணப் பாவை பணித்தகுற் றேவ லடியவரே.


அடிவேத நாறுஞ் சிறப்பார்ந்த வேத மனைத்தினுக்கு
முடிவே தவளமுளரி மின்னே முடியா விரத்தின
வடிவே மகிழ்ந்து பணிவார் தமது மயலிரவின்
விடிவே யறிந்தென்னை யாள்வார் தலந்தனில் வேறிலையே.

வேறிலை யென்று னடியாரிற் கூடி விளங்குநின்பேர்
கூறிலை யானுங் குறித்துநின்றே னைம்புலக் குறும்பர்
மாறிலை கள்வர் மயக்காம னின்மலர்த்தா ணெறியிற்
சேறிலை யீந்தருள் வெண்டா மரைமலர்ச் சேயிழையே.


சேதிக்க லாந்தர்க்க மார்க்கங்க ளெவ்வெவர் சிந்தனையும்
சோதிக்க லாமுறப் போதிக்க லாம்சொன்ன தேதுணிந்து
சாதிக்க லாமிகப் பேதிக்க லாமுத்திதா னெய்தலா
மாதிக்க லாமயில் வல்லிபொற் றாளை யடைந்தவரே.



அடையாள நாண்மல ரங்கையி லேடு மணிவடமும்
உடையாளை நுண்ணிடை யொன்று மிலாளை யுபநிடதப்
படையாளை யெவ்வுயிரும் படைப்பாளைப் பதுமநறும்
தொடையாளை யல்லது மற்றினி யாரைத் தொழுவதுவே.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.