கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்

பாடல் எண் : 10
ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி
ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல்
வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்
பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.

பொழிப்புரை :

வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர் . மனமார வாழ்த்தும் இயல்பினரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர் . குற்றம் தீர , அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே , அடியார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர் .

குறிப்புரை :

இஃது , ஏற்றத் தாழ்வற அடியார் எல்லார்க்கும் அருள் செய்யும் வலிதாயத் தைப்  பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவார் என்கின்றது . ஆசியார மொழியார் - ஆசிகளை நிரம்பச்சொல்லும் மனப் பண்பற்ற சமணர்கள் . அல்லாதவர் - சைவத்திற்குப் புறம்பானவர்கள் . ஏசி - இகழ்ந்து , ஈரம் - அன்பு . பொருள் என்னேல் - உறுதிப் பொருளாகக் கொள்ளாதே . வாசி தீர - வேற்றுமை நீங்க . இறைவன் வாசி தீரக் காசு நல்கும் வள்ளன்மை விளங்கக் கூறியதுமாம் .   பேசும் ஆர்வம் - இடைவிடாது பாராட்டிப் பேசும் விருப்பம் . ஆர்வம் - அமையாத காதல் . பெரியோர் ஆர்வமுடையார்க்கு அடியார் எனப் பேணும் என  உருபுவிரித்துப் பொருள் காண்க .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.