கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday 16 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 9
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில் வீற்றிருந் தானுமற்றைப்
பொறியர வத்தணை யானுங்காணாப் புகலி நிலாவிய புண்ணியனே
எறிமழு வோடிள மான்கையின்றி யிருந்தபி ரானிது வென்கொல்சொல்லாய்
வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.


பொழிப்புரை :
மணம் செறிந்த தாமரைத் தவிசில் அறுவகைக் குற்றங்களையும் விலக்கி ஏறி அதில் வீற்றிருக்கும் நான்முகனும், புள்ளிகளையுடைய பாம்பினைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும் காண இயலாதவனாய்ப் புகலியில் விளங்கும் புண்ணியனே! பகைவரைக் கொல்லும் மழுவாயுதத்தோடு இளமான் ஆகியன கையின்கண் இன்றி விளங்கும் பெருமானே! மணம் கமழும் அழகிய பொழில்களால் சூழப்பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக.

குறிப்புரை :
முளரித் தவிசு - தாமரையாசனம்; (பதுமாசனம் என்னும் யோகாசனமுமாம்) ஆறும் செற்று - காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் உட்பகை ஆறையும் அழித்து. அதில் வீற்றிருந்தான் - அந்தத் தாமரையில் வீற்றிருந்த பிரமன். பொறி அரவம் - படப்பொறிகளோடு கூடிய ஆதிசேடன். அணையான் என்றது திருமாலை.


குருவருள்:`
எறிமழுவோடிளமான் கையின்றி இருந்த பிரான்` என்றதனால் தனக்குத் திருவீழிமிழலையில் அருள் செய்த பெருமான் மழு ஆயுதமும் மானும் கைகளில் இல்லாமல் சீகாழித் திருத்தோணி மலையில் வீற்றிருந்தருளும் உமாமகேசுரர் என்பதைக் குறித்தருள்கின்றார் ஞானசம்பந்தர். அங்ஙனம் உள்ள காழிக் கோலத்தை வீழியிலும் காட்டியது என்னே என்று வியந்து பாடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.