கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday 16 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 7
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன தோளியொ டுங்கலந்து
பூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி நிலாவிய புண்ணியனே
ஈமவ னத்தெரி யாட்டுகந்த வெம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
வீமரு தண்பொழில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :
மன்மதன் தீப்பிழம்பாய் எரியுமாறு கண்ணால் நோக்கி, மூங்கில் போலும் தோளினையுடைய உமையம்மையோடும் கூடி, தாமரை மலரில் விளங்கும் நான்முகன் போல்வார் போற்றப் புகலியில் விளங்கும் புண்ணியனே! சுடுகாட்டில் எரியாடலை விரும்பும் எம்பெருமானே! மலர்கள் மருவிய குளிர்ந்த பொழில்களால் சூழப் பெற்ற திருவீழிமிழலையில் விண்ணிழி கோயிலை விரும்பியதற்குக் காரணம் என்னையோ! சொல்வாயாக!

குறிப்புரை :
காமன் - விருப்பத்தை விளைவிக்குந் தெய்வம். எரிப்பிழம்பாக - தீயின் திரட்சியாக. நோக்கி என்றதால் விழித்தெரித்தமை குறிக்கப்படுகின்றது. காம்பு -முள்ளில்லாத மூங்கில். பூ மரு - தாமரைப் பூவைச் சேர்ந்த பிரமன் இந்திரன் முதலியவர்கள் பூசித்த தலமாதலின் நான்முகன் போல்வார் ஏத்தஎன்றார்.ஈமவனம் - சுடுகாடு;என்றது சர்வசங்காரகாலத்து எல்லாம் சுடுகாடாத லைக் குறித்தது.வீ - பூ. காமனைஎரித்தவர் ஒருபெண்ணோடு கலந்திருக்கின்றார் என்றது,அவர் கலப்பு எம்போலியர் கலப்புப்போல் காமத் தான் விளைந்ததன்று;உலகம் போகந்துய்க்கத்தான் போகியாயிருக்கின்ற நிலையைத் தெரிவித்தவாறு. ஈம எரியிலாட்டுகந்தபெருமான் பொழில் சூழ் மிழலை விரும்பியது எங்ஙனம் பொருந்தும்? என வினாவியது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.