கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலூர்

பாடல் எண் : 6

கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில்கானில்
குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிடமென்பர்
விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந்தெங்கும்
முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புகலூரே.

பொழிப்புரை :

இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு 
ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் 
முழங்கவும், குள்ளமான பூகணங்கள் போற்றவும், பல
காலும் பழகிய இடமாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் 
புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் 
ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக்கும் 
முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் 
ஒலியைத் தரும் புகலூர் என்பர்.

குறிப்புரை :

கழலின் ஒசை - ஆண் பகுதியாகிய வலத்தாளில் அணிந்த 
வீரக்கழலின் ஓசை; சிலம்பின் ஓசை - பெண் பகுதியாகிய 
இடத்தாளில் அணிந்த சிலம்பின் ஓசை. அன்றிச் 
சிவபெருமானது கழலின் ஓசையும் மாறாடிய மகாகாளியின் 
சிலம்பின் ஓசையும் என்பாருமுளர். குனித்தார் - ஆடியவர், 
குறள்பாரிடம் - குள்ளமான பூதங்கள், மிடைவுற்று - நெருங்கி, 
முந்நீர் - கடல்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.