கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்

பாடல் எண் : 5

புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்
மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்
சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.

பொழிப்புரை :

வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க. மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளியோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.

குறிப்புரை :

இது, பரிபாக விசேடம் கைவரப் பெறாத மந்தியும் கடுவனும் கூட வணங்கும் பொழுது, அச்சிறப்பு வாய்ந்த மக்கள் வழிபடாராயின் அவர் வினை தீரா தென்பதை அறிவிக்கின்றது. புந்தியொன்றி நினைவார் - மனம் பொறி வழிச்சென்று புலன்களைப் பற்றாமல் ஒருமையாய் நின்று தியானிக்கும் அடியார்கள். பொருளாய - தியானிக்கும் பொருளாய. அந்தியன்னதொரு பேரொளியான் - அந்திக் காலத்துச் செவ்வொளி போன்ற திருமேனி உடையான். மந்தியும் கடுவனும் வணங்கும் வலிதாயம் என்றமையால் மக்களும் தம் இல்லற இன்பம் குலையாதே வந்து வணங்கும் பெற்றியர் என்பது விளக்கியவாறு.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.