கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்

பாடல் எண் : 8

கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.

பொழிப்புரை :

உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத் துயரம் கெடும் என வினை முடிபு காண்க . திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுதமாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி , வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும் , மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும் .

குறிப்புரை :

இது வினைக்கீடாகிய உடலில் உயிருள்ள அளவும் தொழுவாரது மனத் துன்பம் மடியும் என்கின்றது . கடல் - பாற்கடல் நஞ்சம் அமுதுண்டு என்றது நஞ்சின் கொடுமை கண்டும் அதனை அமுதாக ஏற்றமையை . இலங்கை யரையன் வலிசெற்று என்றது அவன் வலிமை காரணமாகவே செருக்கியிருந்தானாகலின் அவனை அது கெடுத்து ஆட்கொண்டார் என்றது .
குருவருள்
சிவபூசை எடுத்துக் கொள்பவர் ` என் உடலில் உயிர் உள்ள அளவும் பூசையை விடாது செய்து வருவேன் ` என்ற உறுதி மொழி கொடுத்தே எடுத்துக்கொள்வர் . அக்கருத்தை இப்பாடலின் இறுதிவரி குறிப்பிடுதலைக் காணலாம் . ` பழனஞ்சேர் அப்பனை என்கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ ` என்ற அப்பர் தேவாரமும் காண்க .

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.