கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்


பாடல் எண் : 3

ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம்
உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.

பொழிப்புரை :

வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன், நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிற மேனியன், நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும் வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.

குறிப்புரை :

இது வலிதாயம் உலகப் பிணியைத் தீர்ப்பது; அதனை நினைத்தால் நும் பிணியும் தீரும்; இன்பம் ஆம் என்கின்றது. ஐயன் - அழகியன். நொய்யன் - அணுவினுக்கு அணுவாய் இருப்பவன். பிணியில்லவர் - அநாதியே பந்தித்து நிற்பதாகிய ஆணவ மலக் கட்டற்ற பெரியார்கள். என்றும் தொழுதேத்த - முத்திநிலையிலும் தொழ. வெய்யபடை - கொடியவர்களுக்கு வெம்மையாய் அடியவர்களுக்கு விருப்பமாய் இருக்கும்படை. திருமாது - உமாதேவி. முடியுடை மன்னனைக்கண்டு பிடியரிசி யாசிப்பார் போலாது வலிதாய நாதரைத் தியானித்துக் காமியப் பயனைக் கருதாதீர்கள்; உய்யு நெறியைக் கேளுங்கள்; அப்போது அதற்கிடையூறாகிய வினைகள் நீங்கும்; இன்பம் உண்டாகும்; வினை நீங்குதலொன்றுமே இன்பம் என்பது சித்தாந்த முத்தியன்றாதலின் வினை தீரும் என்பதோடமையாது நலமாமே என்று மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.