கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்


திருவலிதாயம்

பாடல் எண் : 1

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.

பொழிப்புரை :

வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா 
என வினமுடிபு கொள்க. சிவனடியார்கள்,விளங்குகின்ற அழகிய 
மலர்களை அகங்கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் 
பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங்களைச் சொல்லி 
உலகமக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை 
மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் 
என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ளஅடியவர்கள் 
மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

குறிப்புரை :

இது திருவலிதாயத்தைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் இல்லை 
என்கின்றது.   மந்திர புஷ்பம் இடுவதற்காக வலக்கையில் பூவை 
வைத்து அர்க்கிய ஜலத்தைச் சொரிந்து கையைமூடி அபிமந்திரித்துப் 
பலர் கூடி வேத மந்திரங்களைச்சொல்லி, இறைவற்குச் சாத்துதல் 
மரபாதலின் அதனைப் `பத்தரோடு....ஒத்தசொல்லி` என்பதால் 
குறிப்பிடுகிறார். பத்தர் -பூசிக்கும் சிவனடியார்கள். பலர் - உடனிருக்கும் 
சிவனடியார்கள் பொலியம்மலர் - விளங்குகின்ற அழகிய மலர். புனல் 
தூவி - அர்க்கியஜலத்தை மந்திரத்தோடுசொரிந்து. ஒத்தசொல்லி - ஒரே 
ஸ்வரத்தில் வேதமந்திரங்களைச் சொல்லி என்ற செய்தென் எச்சச்தைச் 
சொல்ல என்று செயவெனெச்சமாக்குக. அங்ஙனம் உறைபவனாயினும்
இங்கே அனைவர்க்கும் விளங்கித் தோன்றும் எளிமைபற்றி. அடியாரவர்
மேல் என்றதில் `அவர்` வேண்டாத சுட்டு. இதனைச் சேர்த்து அடியார்கள் 
பெருமை விளக்கியவாறு. இடர் - ஆதிபௌதிகம் முதலிய வினைகளால் 
வரும் துன்பம். நோய் - பிறவிநோய். `பத்தரோடு பலரும் தூவிச்சொல்ல 
உலகத்தவர் தொழுது ஏத்தப்பெருமான் பிரியாதுறைகின்ற வலிதாயத்தைச் 
சித்தம் வைத்த அடியார்மேல் இடர் நோய் அடையா` எனக் கூட்டுக.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.