கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 5
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலொ டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும் புகலி நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசவெம்மா னெம்மிறை யேயிது வென்கொல்சொல்லாய்
வெந்தவெண் ணீறணிவார்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.

பொழிப்புரை :

சந்தனக் குழம்பு பூசிய பெரிதான தனங்களை உடைய உமையம்மையோடு, உண்மையில் தவறாத புத்தியினை உடைய நான்மறை அந்தணர்கள் போற்றும் புகலியில் விளங்கும் புண்ணியனே! எம்மை அநாதியாகவே ஆளாய்க் கொண்டுள்ள ஈசனே! எம் தலைவனே! எமக்குக் கடவுளே! வெந்த திருவெண்ணீற்றை அணிந்த அடியவர் வாழும் திருவீழிமிழலையுள் விண்ணிழி கோயிலை நீ விரும்புதற்குக் காரணம் என்னையோ? சொல்வாயாக!

குறிப்புரை :

தளராத வாய்மைப் புந்தியின் நான்மறையோர்கள் - வேதங்களைப் பலகாலும் பயின்றதால் உண்மையினின்றும் தளராதபுத்தியினையுடைய மறையோர்கள்.சந்து அளறு - சந்தனச்சேறு. தையலாரோடும் மறையோர்கள் ஏத்தும் எனச்சிறப்பித்தது மனந்தளர்தற்கேது இருந்தும் தளராத பொறி வாயில் ஐந்தவித்த புண்ணியர் எனத் தெரிவித்தவாறு. வெந்த வெண்ணீறு - இனி வேகுதற்கில்லாத - மாற்றமில்லாது, ஒருபடித்தான வெண்ணீறு. எந்தமையாளுடையீச - எம்மை அநாதியே வழிவழியாளாக் கொண்ட தலைவ. ஈசன் - செல்வமுடையவன். எம்மான் - எமக்கெல்லாம் பெரியோய். இறை - தங்குதலையுடையவன். அணிவார் என்றது அடியார்களை.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.