கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Tuesday 16 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருப்புகலியும் திருவீழிமிழலையும்

பாடல் எண் : 11

விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக மென்கொ லிதென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு பூங்கொடி யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் பாரொடு விண்பரி பாலகரே.


பொழிப்புரை :
விண்ணிழி கோயில் விரும்பிய புண்ணியனைப் போற்றி ஞானசம்பந்தன் சொன்ன பாடல் வல்லார்கள் பாரொடு விண்ணகத்தையும் பரிபாலனம் புரிவர். புகலிப்பதியில் விளங்கும் புண்ணியனாய் அழகிய இளங்கொடி போன்ற உமையம்மையோடு விளங்குவானைத்துதித்துத் திருவீழிமிழலை யில் விண்ணிழி கோயிலை விரும்பிய வித்தகம் என்னையோ சொல்லாய் என்று கேட்டுப் புகழால் மிக்கவனும் நலம்தரும் நூற்கேள்வி உடையவனும் நான்மறை வல்லவனும் ஆகிய ஞானசம்பந்தன் பாடிய பண்ணிறைந்த இப் பதிகத் திருப்பாடல்களை ஓதுபவர் நிலவுலகத்தோடு விண்ணுலகத்தையும் ஆளும் சிறப்புடையவராவர்.

குறிப்புரை :
நண்ணிய கீர்த்தி நலங்கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் எனத் தன்னை வியந்ததாமோ எனின்; அன்று. ஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனருள் வழிநின்று, தன்வசமற்று அவனுரை தனதுரையாகப் பாடிய பாடல்களாதலின் இது அவனுரை. ஆதலின் தன்னை வியந்து தான் கூறியதன்று. பாரொடு விண் என்ற ஒடு உயர்பின் வழித்தாய், பார்கன்ம பூமியாய் வீட்டிற்கு வாயிலாகும் சிறப்புடைமையின் சேர்க்கப் பெற்றது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.