கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை -திருவலிதாயம்

பாடல் எண் : 11
வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத்
தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக்
கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங்
கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.

பொழிப்புரை :

வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க. வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந்திருந்து இசையோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.

குறிப்புரை :

இது, வலிதாயநாதன் மீது பாடிய இப்பத்துப் பாடலையும் மனத்துள் கொண்டு சிந்தித்துத் தெளிந்து இசையோடு பாடவும் வல்லவர்கள் சுவர்க்க போகத்தினும் பெரிய போகம் எய்துவர் என்கின்றது. மல்கிய - நிறைந்த. அண்டவாணன் - அண்டங்கள் தோறும் ஒன்றாயும் உடனாயுமிருந்து வாழ்பவன். அவன் திருவடியை இடைவிடாது தியானிப்பதால் மாலை போன்ற தமிழாகக் கூறிய ஞானசம்பந்தப் பெருமானது தமிழ்ப்பாடல் பத்தையும் வல்லவர் உயர்வார் எனக்கூட்டுக. கண்டல் - தாழை. கடற்காழி - கடற்கரை நாடாகிய காழி என்பது மட்டும் அன்று; கடலில் மிதந்த காழி என்றதையும் உட்கொண்டு. மாலைத்தமிழ் - ஒரு பொருள்மேற் கூறிய கோவையாகிய பாடல். வலிதாயநாதரை மனமொழி மெய்களான் வணங்கியவர் வினையறுவர் வீடுபெறுவர் என்ற ஒருபொருளையே கூறுதலின் இது மாலைத்தமிழாயிற்று. இசை பாடவல்லார் வானத்து வைகி உயர்வார் என இயைப்பாரும் உளர். இசை பாடவல்லார்க்கு வானத்தின்பம் ஒரு பொருளாகத் தோன்றாதாதலின் வானத்தினும் உயர்வர் என்பதே அமையுமாறு காண்க.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.