கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 2 ம் திருமுறை -திருப்பூந்தராய்

திருப்பூந்தராய்

பாடல் எண் : 1

செந்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்
புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்
துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்
பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே.

பொழிப்புரை :

செந்நெல் விளையும் அழகிய வயல்களை உடைய சோலைகளின் 
அயலிடங்களில் வளமையான புன்னை மரங்கள் உதிர்த்த பூக்கள், 
வெண்மையான துணியிற் பவளங்கள் பரப்பினாற் போல விளங்கும் 
திருப்பூந்தராய் என்னும் சீகாழிப்பதியில், நல்ல தேவர்கள் நெருங்கி
வந்து, தங்களின் முடிகளைத் தோய்த்து வணங்கும் திருவடிகளை 
உடைய இறைவரே! பின்னிய உமது செஞ்சடையில் இளம் பிறை
யை அதற்குப் பகையாகிய பாம்போடு வைத்துள்ளது ஏனோ?
 சொல்வீராக.

குறிப்புரை :

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் இத்திருப்பதிகம் முதலாக 
நான்கு பதிகத்தில், சிவபெருமானை முன்னிலையிற் பெற்று, 
வினாவுதலும் விடை கூறியருள வேண்டுதலும் அமையப்
பாடியிருத்தல்பற்றி, இவற்றை `வினாவுரை` என்றனர். இத்
தலைப்புடைய பிற மூன்றும் காண்க. இதன் ஒவ்வொரு 
திருப்பாடலிலும் வெவ்வேறு பொருளைக் குறித்து வினாவினார். 
முதல் வினா இறைவன் திருமுடிச்சார்புடையது. ஈற்று வினா, 
திருவடிச்சார்புடையது. இடையிலே எருதேற்றம், மாதுபாகம்.
 காமதகனம், கங்கையடக்கம், குழையும் தோடும் குலவும் முகம், 
இராவணனுக்கு அருளிய ஆக்கம் என்பவை வினாவிற்குரிய 
பொருளாயுள்ளன. மூன்றாம் அடிகளிலுள்ள விளிகளால் 
திருவடிப் பெருமையும், அமலமும் (யானையுரித்தவரலாறும்), 
விருப்பு வெறுப்பில்லாத வித்தகமும் (பிறையும் பாம்பும் சூடிய 
வரலாறும்), உயிர்களைத் தாங்கியுதவும் அருளுடைமையும் 
(மானேந்தியதால் விளங்கும் பசுபதித்துவமும்), திருவெண்ணீற்றுத் 
திருமேனிப் பொலிவும், மால்விடையூரும் மாட்சியும், மறை 
முதலாகும் இறைமையும், அடியாரைக்காக்கும் அடியும் (காரணமும்) 
குறிக்கப்பட்டன. இவ்வாறு பதிகந்தோறும் உய்த்துணர்ந்து
 போற்றிவரின், சிவபிரான் திருவருள் எளிதின் எய்தும். 
திருமுறையைப் பாராயணம் புரிவோர் அதனால் பெறும் பயன் 
அவரவர் அநுபவத்தால் அன்றி அறிய ஒண்ணாது. பாக்கள் 
வெளிப்படையாகத் தோன்றலாம். கருத்து அருள்வெளியைக்
 கவர்ந்தது, மருளுலகம் இவ்வுண்மையை உணராது. வேதத்தின் 
இயல்பே இதன் இயல்பு. முதற் பத்துத் திருப்பாடல்களுள்ளும் 
`சொலீர்` என்று விடையிறுத்தருள வேண்டுவதுணர்க. சடையில் 
பிறையும் பாம்பும் ஒருசேர வைத்ததற்குக் காரணம் சொல்ல
 வேண்டுகின்றார்; சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கொள்ளும் 
ஐதிகத்தைக் கருத்திற் கொண்டு, பகைப்பொருள்கள் இரண்டும் 
ஓரிடத்தில் இருப்பது குற்றம் என்பார்க்கு, `வேண்டுதல் வேண்டாமை 
இல்லான்` ஆகிய சிவபிரான் சடையில், பகை நீங்கி உறவுகொள்ளும்
 நிலையை அவ்விரண்டும் அடைந்துள்ளன என்றார். பிறையைச் 
சூடிய வரலாறு, சிவாபராதம் புரிந்தாரும் அதனை உணர்ந்து அந்த
 இறைவனை வணங்குவராயின், அவர்க்குத் திருவருள் கிடைப்பது 
உறுதி என்னும் உண்மையை உணர்த்துவது. ஐந்தலைப் பாம்பணிந்தது,
`பிறவி ஐவாய் அரவம் பொரும் பெருமான்` (திருவாசகம் 139) என்ற 
கருத்தினது. "தூமதி சடைமிசைச் சூடுதல் தூநெறியா மதியான் என 
அமைத்தவாறே" (பட்டினத்தார் ஒருபா ஒருபஃது 6.) `சோழவளநாடு 
சோறுடைத்து` இதிலுள்ள செந்நெல் அம் கழனிப்பழனம் உடைமை, 
சீகாழிக்கும் உரித்தாயிற்று. கிழி - துணி. கிழி (துணியும் அறுவையும்) 
காரணப்பெயர், புரை - ஒத்த. துன்னி-நெருங்கி. துன்னித்தோய்கழல் 
என்க. பழனத்தின் அயலிடங்களில் புன்னைப் பூக்கள் விழுந்துகிடக்கும் 
தோற்றம் வெள்ளைத் துணியில் பவளம் கிடக்கும் காட்சியை 
ஒத்திருந்தது என்க. `புன்னை பொன்தாது உதிர்மல்கும் அந்தண்புகலி`
 (தி.3.ப.7.பா.9) என்றதால் அதன் பூக்கள் செம்பவளம் போல்வன ஆதல் 
அறியப்படும். பாண்பு என்பது பாம்பு என்று திரிந்தது. பாண் - பாட்டு. 
பாட்டைக் கேட்கும் இயல்புடையது பாண்பு. இதில், பிறையும் பாம்பும் 
சடையில் ஒருங்கு வைத்தவாற்றை வினாவினார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.