பாடல் எண் : 5
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
பொழிப்புரை :
ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடை முடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக்கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.
குறிப்புரை :
ஒருமை - ஒரு திருமேனியிலேயே, பெண்மை உடையன் - பெண் உருவத்தை உடையன்; என்றதால் பெண்ணுருவும் ஆணுருவுமாகிய இருமையும் உடையன் என்பது குறித்தவாறு. பெண்மை - பெண்ணுரு. உடையன் என்றதிலுள்ள விகுதியால் ஆணுருவாயினும் பெண்மை உடைமையும், சிவம் உடையானும் ஆம் என்றவாறு. சடையன் - பெண்மையுருவில் பின்னிய சடையும் ஆணுருவில் அமைந்த சடையுமாயிருத்தலின் இரண்டிற்குமேற்பச்சடையன் என்றார். உரைசெய்ய - தோழியர் தலைவன் இயல்பைச் சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக்கொண்டான் என்பார் `அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்` என்றார். `ஓர் காலம் கடல் கொள்ள மிதந்த தலம் இது என்னும் பெருமைபெற்ற பிரமபுரம்` என இயைத்துப் பொருள் காண்க. ஓர்காலம் - சர்வசங்கார காலம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.