கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Sunday, 14 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருப்பிரமபுரம்


பாடல் எண் : 4

விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமக பாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

விண்மகிழ்ந்தமதில் - ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின் பொன், வெள்ளி, இரும்பாலான கோட்டை. எய்தது - மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கித் துளைத்தது. உள்மகிழ்ந்து - மனமகிழ்ந்து, தேரிய - ஆராய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மண் மகிழ்ந்த அரவம் - புற்றினை விரும்பும் பாம்பு, இறைவன் அணிந்த பாம்பு புற்றில் வாழாததாயினும் சாதி பற்றிக் கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்தியபாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையை யும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் - உமாதேவியார். பலிதேரவந்தார் எனதுள்ளம் கவர்ந்தார் என்றது என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார் என்பதை விளக்கியவாறு

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.