கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம் கலைகழகம்-சமயம்

Monday, 15 August 2011

திருஞானசம்பந்தர் தேவாரம் 1 ம் திருமுறை - திருப்பிரமபுரம்


பாடல் எண் : 9

தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொழிப்புரை :

திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர்கள்வனாய் விளங்குபவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

குறிப்புரை :

மாலொடு தண் தாமரையானும் தாள் நுதல் செய்து இறை காணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் எனக் கூட்டுக. மால் தாள் காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க. தாள் நுதல் செய்து - தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும் பொருட்டு; இறைவனைக் காணும் பொருட்டு என்பாரும் உளர். நீணுதல் - மால் பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். ஒழிய - செயலற்றுப் போக. நிமிர்ந்தான் -அண்ணாமலையாய் உயர்ந்தவன். சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது இவளும் வையத்தவருள் ஒருத்தியாயிருக்க இங்ஙனம் கூறினாள், ஏனைய மகளிர்க்கு இல்லாததாகிய, இறைவனே வலிய வந்து உள்ளங் கவரும் பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்க.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.